Friday, 26 May 2017

உள்ளேன் ஐயா

'உள்ளேன் ஐயா' சொல்வதில் உள்ள நன்மைகள்!

'நெடு நாளைய நண்பர்; நெருக்கமான நண்பர்ன்னு சொல்றீங்க;
ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம் ஆச்சுங்கிறீங்களே...'

'ஆமா... எங்க நேரம் இருக்கு...'

'வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க;
ஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே மாட்டேங்குது...'

'கூடப் படிச்சவன்;
இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி உயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி, வேலை மிகுதி...'
- இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச கேட்டிருப்பீர்கள்;
ஏன், நீங்களே கூட, இப்படி சொல்லியிருக்கலாம்.

மேலே கூறப்பட்டவற்றில்,
சந்திப்பதற்கு தடையாக சொல்லப்பட்ட காரணங்கள்
எல்லாம் சாக்கு, போக்குகளே தவிர, வேறு அல்ல.

வாழ்க்கையில்,
வெற்றிக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை ஒட்டியே, நம் வாழ்வின் நிகழ்வுகள் அர்த்தமுள்ளவைகளாக மாறுகின்றன.

வீடு, குடும்பம், தொழில், வேலை, வருமானம் மற்றும் சவுகரியம் என வாழ்கிறவர்கள், வாழ்வின், சில இனிமையான பக்கங்களை இழக்கின்றனர் என்பேன்.

நெடுநாள் நண்பருடன் சேர்ந்து, அரட்டை அடிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த மகிழ்வின் அளவீடுகளை அளக்க, உலகில் எந்தவொரு கருவியும் கிடையாது. இந்த மகிழ்ச்சியான கணங்கள், வாழ்வில் ஏனோ புதைத்து வைக்கப்பட்ட, புதையலாகவே இருந்து விடுகின்றன. இவை, வெளிவருவதோ, பயன்படுவதோ இல்லை.

அந்த அத்தை காட்டும் பாசத்தின் அளவு, உள்ளத்தில், அடித்தளத்திற்கு போகும் போது, வாழ்வில் எவ்வளவு நெகிழ்ச்சியான கணங்கள் இருக்கின்றன என்பதை, அழகாக உணர்த்தும். புது உறவுகள் பலரது பாசங்கள், மேலோட்ட மானவையாகவும், பாசாங்காகவும் இருப்பதை நம்மால்,
நன்கு உணர முடியும்.

கூட படித்தவருடன் நடத்தும், 'வாடா... போடா...' உரையாடல்களில், சற்றும் செயற்கைத்தனம் கிடையாது. பழைய நினைவுகளில் மூழ்கி, காக்காய்க்கடி கமர்கட் வரை இறங்கினால், உள்ளத்தில் ஏற்படும் பரவசத்திற்கு ஈடு இணை இல்லை.

புதிய நட்புகளில் பல, நம்மை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்; 'இவனால், என்ன பயன்...' என்று லாப, நஷ்ட கணக்கு போட்டு பார்க்கிறது.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவ்வப்போது ஒரு, 'ஹலோ...' சொல்லி வைக்க வேண்டும். கடிதம், மின்னஞ்சல் மற்றும் நேரில் என, எது சாத்தியப்படுகிறதோ, அதை செயல்படுத்த வேண்டும்.

'ரொம்ப பாசமானவர், அன்பானவர், நட்பிற்கு நல்ல முக்கியத்துவம் தருபவர்...' என்று, நம் வட்டத்தில் பெயரெடுக்க, இச்செயல் மிக உதவும்.

மாறாக, 'இது சோழியன் குடுமி; சும்மா ஆடாது!' என்கிற பழமொழிக்கு, நாமே இலக்கணமாகி விடக் கூடாது.

கடந்த மாதம், ஒரு திருமணத்தில், காவல் துறை அதிகாரி ஒருவர் அறிமுகமானார். 'இந்தப் பக்கமா வந்தேன்; மரியாதை நிமித்தமா உங்கள பாக்க வந்தேன்; விஷயம் ஒன்றுமில்லை; போயிட்டு வர்றேன்...' என, இரண்டு நிமிடத்தில், இருக்கையை காலி செய்தால்,
அவரிடமிருந்து, ஒரு வாக்கியம் கண்டிப்பாக வரும்...

'காவல் துறை விஷயமா, என்னன்னாலும் சொல்லுங்க; நான் இருக்கேன், பாத்துக்கிறேன்...'

இதற்கு தான், 'உள்ளேன் ஐயா சொல்லி வைக்க வேண்டும்' என்கிறேன்.

இதில், சரிவர நடந்து கொண்டால், நாளை எதற்கும், எவரிடமும் நம்பி போய் நிற்கலாம்.

'காரியம்ன்னா மட்டும் வருவார்;
இல்லன்னா கண்டுக்கவே மாட்டார்...' என்கிற பெயரை
மட்டும் ஒருபோதும் எவரும் எடுத்து விடக் கூடாது.
)

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.