Thursday, 20 April 2017

ஒப்பீடு

ரோட்டில் ஏதோ விழுந்த சப்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். ரோட்டோரத்தில் இருந்த பக்கத்து வீட்டு வாசலில் ஒரு சாப்பாட்டு தட்டும் மூன்று இட்லியும் சிதறிக்கிடந்தது. தெருவோரத்தில் தூங்கிக்கொண்டு
இருந்த நாய் ஒன்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து வந்து அந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்தது.

பக்கத்து வீட்டில் பிளஸ் டூ தேர்வெழுதி விட்டு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் கோபியின் குரல் வழக்கத்தை விட உச்சஸ்தாயத்தில் கேட்டது. எவ்வளவு அமைதியாக பேசுவான். ஏன் இப்போது இப்படி பேசுகிறான் என மனம் நினைத்தது. என்ன பேசுகிறான் என்று காது கொடுத்துக் கேட்டேன். அவன் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கோபத்தில் இட்லியுடன்  தட்டை எடுத்து  வீசியிருக்கிறான்.

" உன்னையும் அவளையும் ஒரே மாதிரி தானே வளர்க்கிறேன். அவளப் பாரு. எந்த பிரச்சனையும் பண்ணாம நான் சொல்றதக் கேட்டுப் படிக்கிறா. நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற? " என்றவரின் குரல் தொடர்ந்து பேச முடியாமல் உடைந்து அழுகையாய் வெளிப்பட்டது.

இது கோபியின் அப்பா குரல். அவர் கூறிய அவள் கோபியின் சகோதரி. மருத்துவக் கல்லூரியில்  BDS மூன்றாம் ஆண்டு மாணவி. பிளஸ் டூ வில் 1173 மதிப்பெண்கள் பெற்று அந்த ஊரில் அதிக மதிப்பெண் பெற்றதற்கான கோப்பையை தட்டிச் சென்றவள்.

" எப்ப பாரு படி படின்னே தொந்தரவு செய்றீங்க. ரெண்டு வருஷமா கஷ்டப்படுத்தினது போதாதா?. ஒரு மாசமாவது என்ன ரெஸ்ட் எடுக்க விடுங்க. திரும்பவும் ஒரு காலேஜில் என்னை கொண்டு போய் அடைக்க போறீங்க. ஒரு மாசமாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்க"  என்று கோபி விட்டுக்கு வெளியே வந்து கத்திக்கொண்டிருந்தான்.

அவர்கள் உரையாடலில் இருந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது. கோடை விடுமுறையில் மகனை நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும் வகுப்புக்கு செல்ல கோபியை அவனுடைய தந்தை கட்டாயப் படுத்துகிறார். மறுக்கும் மகனிடம் மகளை ஒப்பிட்டு பேசுகிறார். மகனுக்கு கோபம் வருகிறது. தட்டையும் வார்த்தைகளை யோசிக்காமல் வீசியெறிகிறான்.

ஒப்பிடுதல்  எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று. வட்டம், சதுரம், நீள்வட்டம், சாய் சதுரம், இணைகரம் இதில் எது அழகு என கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள். ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில் ஒரு வடிவம்
அழகு என்று கருதினால் அது அவருடைய பரப் பார்வையே. வடிவங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. ஒவ்வொன்றும் மற்றவைகளிலிருந்து வேறுபடுகிறது.

இந்த வடிவங்களைப் போல மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. ஒவ்வொருவரும் வேறு பட்டவர்கள். ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலான நேரத்தில் நம்மைப் போல மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

கோபியின்  அப்பா தன்னைப் போல் தன் மகள் இருக்க வேண்டும் என நினைத்தார். மகள் அவரின் கனவுகளுக்கு நிஜ வடிவம் கொடுத்ததால்  வாழ்க்கையை சொர்க்கமாக உணர்கிறார். மகன் தன் கனவுகளை சொல்வதற்கும் வாய்ப்பு கொடுக்காமலிருப்பதால் வாழ்க்கையை நரகமாக உணர்கிறார். மகனும் மகளும் தன்னைப் போல அல்லது தான் விரும்பியவற்றை செய்பவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர்கள் இருவருக்கும் தனித்தன்மை இருப்பதை மறந்து இருவரையும் ஒப்பிடுகிறார். இருவரிடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளாததால் தான் அவரின் குரல் அழுகையாக வெளிப்படுகிறது.

ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்ற புரிதல் இல்லாததால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது.

"என் அம்மாவைப் போல உன்னால் சமையல் செய்ய முடியவில்லை" என்று கணவன் கூறும் போதும்

"என் அப்பாவைப் போல உன்னால் அக்கரை காட்ட முடியவில்லை"  என்று மனைவி கூறும் போதும்

" அவளைப் போல உன்னால் மதிப்பெண் பெறமுடியவில்லை" என்று மகனிடம் கூறும் போதும்

" ராஜு வை போல திறமையாக வேலை செய்ய வேண்டும்" என்று அலுவலக மேலாளர் சொல்லும் போதும்

ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள் என்பதை மறந்து  போய் பேசுகின்றனர்.  எப்போதெல்லாம் நம் எண்ணங்களைப் போல மற்றவர்களின் எண்ணங்களும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

மகன் தலையின் இருபுறமும் தலைமுடியில் இரு கோடுகள் போட நினைக்கிறான். அப்படி கோடு போட்டால் அவன் ரவுடி மாதிரி ஆகிவிடுவான் என நினைத்து அதை தடுக்கிறார் அவனது தந்தை. ஒவ்வொருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை இரசிக்கும் தந்தை மகனின் ஆசைக்கு தடைபோட மாட்டார்.

ஒன்று படிக்கப் பிடிக்காமல் பொறியியல் கல்லூரிகளில் நிரம்பி வழியும்  மாணவர்களின் பெரும்பாலானோர் தங்களுடை தந்தையின் கனவுகளை நிஜமாக்க வந்தவர்களாகவே இருக்கும்.

"என்னைப் போல் செயல்படு" , "அவளைப் போல் செயல்படு" போன்ற வாக்கியங்கள் சில சமயங்களில் நீங்கள் விரும்பும் இலக்கை பெற்றுத் தரலாம். ஆனால் அது இருவரிடையே இருக்கும் அன்பு, மகிழ்ச்சி, அக்கரை ஆகியவற்றை நிச்சயமாக குறைக்கும்.

"நீ மோசமானவன் " என்று பார்ப்பதை விட " நீ மற்றவர்களிலிருந்து வேறுபடுகிறாய்" என்று ஒருவர் மேல் உள்ள பார்வை மாறுபடும் போது  வாழ்க்கை இன்னும் மகிழ்வான தருணங்களை தரும்.

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் இன்னொரு மனிதரின் நகலாக இருக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள். மனிதர்களுக்கிடையே இருக்கும் இந்த வேறுபாடுகளை இரசிக்கத் தெரிந்தவர்களின் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி இழையோடிக்கொண்டிருக்கும்.

நமக்கு முன்னால் இருக்கும் மனிதர்களின் வேறுபாடுகளை நேர்மறையாக பார்க்க ஆரம்பித்தால்
நமக்குள் இருக்கும் வேறுபாடுகளும் நேர்மறையாக நமக்கு தோன்ற ஆரம்பிக்கும்.

1 comment:

 1. PG TRB - ENGLISH
  VETTRI TNPSC/TET/TRB
  COACHING CENTRE
  DHARMAPURI

  PG TRB ENGLISH
  DEMO 26-04-2017
  REGULAR CLASS - 03-05-2017
  PLACE -- DHARMAPURI
  PH : 9786583121 (Bala Chandru)
  9786102355

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.