Monday, 19 December 2016

சீக்கிரம் கெட்டுப்போங்கள் நண்பர்களே, சக மனிதர்களையும் நன்றாகக் கெடுங்கள்

உங்களைக் கெடுப்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை!

-அரசியல் அறிவீர்
ம.செந்தமிழன்
+++++++++++++++++++++++++++++

இப்போது அறுபதுகளில் இருக்கும் பெரும்பாலானோர் வெறுக்கும் வார்த்தை ஒன்றைப் பற்றிய கட்டுரை இது. ஆகவே, அவர்கள் இக்கட்டுரையின் இரண்டாம் பத்திக்கு மேல் பயணிக்க வேண்டாம். ஒருவேளை, மீறிப் பயணித்தால் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ‘நான் உங்கள் பிள்ளைகளைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, ஊதாரியாக்குவதற்காக எழுதுகிறேன்’. ஆம்! இந்தக் கட்டுரையின் வழியாக உங்கள் பிள்ளைகளிடமும், பேரப் பிள்ளைகளிடமும் நான் பேசப் போவது, ‘அரசியல்’!

இந்த வார்த்தையை நீங்கள் எவ்வளவு மோசமாகச் சித்தரித்தீர்கள்? இந்த வார்த்தை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக எவ்வளவு போராடினீர்கள், கண்ணீர் வடித்தீர்கள்? உங்கள் போராட்டங்களின்  விளைவாகத்தான் இப்போது குடும்பம் குடும்பமாக வங்கி வாசலில் காத்திருக்கிறோம். கல்லூரிக் காலங்களில் அரசியல் பேசுபவர்களிடம் உங்கள் பிள்ளைகள் பழகினால், ‘உன்னைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க வந்திருக்கிறான் அவன் /அவள்’ என்று ஏசினீர்களே. ’தேர்தலில் வாக்களிப்பது ஒன்றுதான் ஒரே அரசியல் கடமை’ என்ற மூடநம்பிக்கையைப் பிள்ளைகள் மனதில் புகுத்தி அவர்களது கேள்வி கேட்கும் ஆற்றலை மழுங்கடித்தீர்களே, நான் அந்த ஆற்றலைக் கூர் தீட்ட எழுதுகிறேன். என் மீது உங்களுக்குக் கோபம் வரட்டும், எனக்குக் கவலையில்லை. உங்கள் கோபத்தைவிட, இந்தத் தலைமுறையின் மீது தொடுக்கப்பட்டுள்ள சாபம் கொடூரமானது.

‘அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் காரணமாக  இந்தியாவில் அரிசி, எண்ணெய் விலை உயர்வு’, ‘ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம்’, ‘இனி அனைவரும் பணமில்லாத பொருளாதாரத்திற்கு மாற வேண்டும்’ ‘இனி உங்கள் நகைகளின் மீதான கண்காணிப்பு அதிகமாகும்’, ‘இனி எரிவாயு மானியம் குறைக்கப்பட்டு நிறுத்தப்படும்’, ‘இனி கல்வி மருத்துவம் ஆகிய துறைகளுக்கான மானியங்கள் நிறுத்தப்படும்’ – இவை போன்ற செய்திகளைப் படித்திருப்பீர்கள். இந்த எல்லாச் செய்திகளின் அடிநாதம் ஒன்றுதான், ‘இனி இந்த நாட்டை ஆளப்போவது, பெருநிறுவனங்கள் மட்டும்தான்’.

1991 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசியல் களத்தில் மிக அதிகமாகப் புழங்கிய சொல், ‘உலகமயம் / தாராளமயம்’ என்பது. இந்தியா போன்ற மரபுச் செழுமை மிக்க நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய திட்டம் அது. இந்தத் திட்டத்திற்காக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு, ‘உலக வர்த்தக அமைப்பு’ (WTO – World Trade Organization). இந்த அமைப்பு 1995 ஆம் ஆண்டு முதல்தான் செயல்படத் துவங்கியது. ஆனாலும், இந்த அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் 1991 ஆம் ஆண்டிலிருந்தெ வெளிப்படையாகத் துவக்கப்பட்டன.

இந்தியாவிற்குள் செருப்பு விற்க வேண்டுமானால், ஏற்கெனவே இங்கே உள்ள செருப்பு உற்பத்தியாளர்களின் விற்பனை பாதிக்கப்படாத வகையில் முடிவெடுப்பது அரசின் கடமை. உள்நாட்டில் எப்பொருட்களை உற்பத்த் செய்ய முடியாதோ அவற்றை மட்டும் இறக்குமதி செய்வதுதான் காலகாலமாக இருந்த பொருளாதாரக் கொள்கை. தாராளமயம் இந்த நடைமுறையைத் தூக்கி வீசி எறியச் சொன்னது. ’நாங்கள் எந்த நாட்டிற்குள்ளும் நுழைவோம் எங்களைத் தடுக்கக் கூடாது. நாங்கள் எந்தத் தொழிலும் செய்வோம், எந்த மலையையும் வெட்டிச் சுரங்கம் அமைப்போம், காடுகளை அழிப்போம்’ எங்கள் மீது எந்தச் சட்டமும் பாயக் கூடாது’ என்பது தாராளமயத்தின் விதி.

இதற்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கிய சதிகாரர் பெயர் ஆர்தர் டங்கல் (Arthur Dunkel). ஆகவே, இந்தத் திட்டம் ‘டங்கல் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.
’இந்தியா இந்தத் திட்டத்தில் கையொப்பம் இடக் கூடாது’ என்று 1991 முதல் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கதறின. குறிப்பாக அக்காலத்தில் இருந்த இடதுசாரி அமைப்புகள் அனைத்தும் ‘டங்கல் திட்டத்திற்கு எதிராக’ நடத்திய ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் கணக்கிலடங்காதவை.

டங்கல் திட்டம் என்றால் என்ன என்பதை விளக்கமாக எழுதி, துண்டறிக்கைகள் அச்சிட்டு தெருக்களில், பேருந்து நிலையங்களில், கல்லூரி வாசல்களில் நின்று கொடுத்தார்கள் அவ்வாறான அமைப்பைச் சேர்ந்தவர்கள். நானும் அவ்வாறான வேலைகளைச் செய்தவன்தான்.
தெருமுனைக் கூட்டம் நடத்துவோம். ஒரு சைக்கிள் ரிக்சாவை வாடகைக்கு எடுத்து அதில் பேட்டரி மைக்கையும் குழல் ஒலி பெருக்கியையும் கட்டிக்கொண்டு, தெருக்களில் செல்லும் மக்களைப் பார்த்து ‘உலகமய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடப் போகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வாருங்கள்’ என்று கதறினோம். எங்களைப் பார்த்தாலே முகத்தை அருவருப்பாகவும், அலட்சியமாகவும் மாற்றிக்கொண்டு நகர்ந்தது மக்கள் கூட்டம்.

தேநீர்க் கடைகளில் கூட்டம் இருந்தால் அங்கே நின்று பேசுவோம். நாங்கள் பேசத் துவங்கினால் அந்தக் கூட்டம் கலைந்துவிடும். கடைக்காரர்களுக்கு எங்கள் மீது கோபம் வரும்.

’விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையப் போகின்றன. இனி, நாட்டு விதைகளே அழிக்கப்படும். உணவு நஞ்சாக மாறிப்போகும். ஏராளமான நோய்கள் பெருகும். மக்கள் மருத்துவம் பார்க்கவே முடியாமல் செத்துப் போவார்கள். ஆகவே, இந்த நிறுவனங்களை எதிர்க்க வேண்டும்’ என்று ஒரு முட்டாள் மனிதர் ஊர் ஊராகக் கத்தினார். அவருக்கென அமைப்பும் இல்லை, கட்சியும் இல்லை. பல இடதுசாரிகள் அவரை, ‘அமெரிக்காவின் ஏஜெண்ட்’ என்று பழிதூற்றினார்கள். உங்களுக்கோ அந்தக் காலத்தில் அவரையும் தெரியாது, அமெரிக்காவின் குரூரமுகமும் தெரியாது. அந்த முட்டாள் மனிதரின் பெயர் நம்மாழ்வார்.

அதிகமில்லை, இரண்டே இரண்டு பக்கங்கள் மட்டும்தான் அப்போதைய துண்டறிக்கைகளில் அச்சிடப்பட்டிருந்தன. அந்த இரண்டு பக்கங்களில் உலகமயத்தினால் விளையப் போகும் கொடுமைகளை அந்த அமைப்புகள் விளக்கியிருந்தன. குமுதம், விகடன், கல்கண்டு, முத்தாரம், சினி நியூஸ் ஆகிய பத்திரிகைகளைக் கக்கத்தில் செருகிக்கொண்டு நடந்த மனிதர்கள் இந்த இரண்டு பக்கத் துண்டறிக்கையை வாங்கக் கூட மாட்டார்கள். தப்பித் தவறி வாங்கினாலும் அவற்றைக் கசக்கி வீசிச் செல்வார்கள்.

அந்தத் துண்டறிக்கையை அச்சிடவும், ரிக்சாவுக்கும் ஒலிபெருக்கிக்கும் வாடகை கொடுக்கவும் என்னைப் போன்றவர்கள் வீதிவீதியாக உண்டியல் குலுக்குவோம். எங்கள் முகத்தைப் பார்த்தாலே சில கடைக்காரர்கள் காறித் துப்புவார்கள்.

அந்தக் கடைக்காரர்கள்தான் இப்போது, ‘இனி எங்களுக்கு வியாபாரமே இல்லையா?’ எனக் கேட்கிறார்கள். உண்மைகளை உதாசீனம் செய்த அந்த மக்கள் கூட்டம்தான் இப்போது, ‘ஒரு நூறு ரூபாய் கிடைக்குமா?’ எனக் கேட்டுக்கொண்டு தெருவில் திரிகிறது. மழை, பனி, வெயில் எதுவாகினும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும். பசித்தாலும் நகர முடியாது, மூத்திரத்தையும் மலத்தையும் அடக்கிக்கொண்டாக வேண்டும். ஒரே ஒரு இரண்டாயிரம் தாளை வாங்குவதற்காக மானம் மரியாதையை எல்லாம் இழந்து நிற்க வேண்டும் என்ற ‘தேச சேவை’யை ஆற்றும் மக்கள் எல்லோரும்  உண்மையை அவமதித்தவர்கள்தான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இப்படி வீட்டை விட்டு வெளியே வந்து நின்றிருந்தால், இப்போது நம்மிடம் செல்வம் நிலைத்திருக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐயா நம்மாழ்வாரின் பேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நமக்கு நோயற்ற வாழ்க்கை கிடைத்திருக்கும் நஞ்சில்லா உணவும் கிடைத்திருக்கும்.
ஏறத்தாழ எல்லாம் முடியும் நிலையில் இனி எந்த அரசியலை உங்களோடு பேசுவது என எனக்குத் தெரியவில்லை.

இதோ இன்னும் சில காலத்தில் மருத்துவம் முழுக்க முழுக்க தனியார் மயம் ஆகிவிடும், கல்வி முழுமையாக தனியார்வசம் சென்றுவிடும், பெரும்பாலான அரசு வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும், காப்பீட்டு நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும், இரயில்வே துறை தனியாருக்குக் கொடுக்கப்படும். ’வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது அரசின் கடமை அல்ல’ என்ற நிலைமை இப்போதே உள்ளது. இன்னும் சில காலத்தில் உங்களால் அரசாங்கத்திடம் நேரடியாகப் பேசக் கூட முடியாது. வேலைவாய்ப்பு முகமைகள் (Agencies) தனியார் நிறுவனங்களிடம் இருக்கும்.

விதைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ‘நாட்டு விதைகளை வீட்டில் வைத்திருப்பதே கிரிமினல் குற்றம்’
நீர்ச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ‘நிலத்தில் உள்ள நீரும் தனியார் நிறுவனங்களுக்கான உரிமை’
இச்சட்டங்களைப் பற்றி இப்போதே பல அமைப்புகள் பேசுகின்றன, எழுதுகின்றன. உங்களுக்கு அவற்றைப் பற்றி ஏதேனும் கவலை உள்ளதா? ஒரே ஒரு நிமிடம் ஒதுக்கி அந்தச் சட்டங்களைப் பற்றிய கருத்துகளை வாசிக்கிறீர்களா?

’எவராவது வந்து நமக்கு இயற்கை உணவு தருவார், நல்ல தண்ணீர் தருவார் அவற்றையெல்லாம் பணத்தால் வாங்கிக்கொள்ளலாம்’ என்றுதானே இருக்கிறீர்கள்? மேற்கண்ட சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் அப்படி எவரும் வந்து உங்களிடம் விற்பனை செய்ய முடியாது. ஒருவேளை விற்பனை செய்தாலும் அவருக்குக்கொடுக்க உங்களிடம் பணம் இருக்காது, அட்டையைத்தான் தேய்க்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்பவர் அந்த அட்டைப் பணத்தை எப்படி வாங்குவார்? பெருநிறுவனங்களின் கடைகள் பல்கிப் பெருக உள்ளன. இனி நீங்கள் அங்குதான் ‘ஆர்கானிக் வெஜிடபிள்ஸ், ஆர்கானிக் ஹனி, ஆர்கானிக் ரைஸ், ஆர்கானிக் ஸ்பைசஸ், ஆர்கானிக் மில்லட்ஸ்’ எல்லாம் வாங்க வேண்டும். அவர்கள் வைப்பதுதான் விலை.

இயற்கை விவசாயம் செய்வோர் எல்லோரும் அவர்களிடம்தான் விற்பனை செய்ய முடியும். ஏனெனில் அவர்களிடம்தான் பணம் இருக்கும். உங்களிடம் அட்டைகள்தானே இருக்கும்!

மேலும் சில காலம் கழிந்த பின்னர், ‘நிலச் சீர்திருத்தச் சட்டங்கள்’ வரும். அந்தச் சட்டங்களின் படி, பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் வேளாண்மையில் ஈடுபடும். அப்போது இயற்கை விவசாயிகள் இருக்க மாட்டார்கள், பெரும்பண்ணைகள் (corporate ranches) மட்டும்தான் இருக்கும்.

ரேசன் கடைகளும் இருக்காது என்பதால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்காக மக்கள் அடித்துக்கொள்வார்கள். நீங்களும் அந்தக் கூட்டத்தில் நிற்க வேண்டியிருக்கும். உணவு மானியம், கல்வி மானியம், மருத்துவ மானியம் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மக்களுக்கு அவை வெறும் வங்கிக் கணக்கில் மாற்றப்படும். அந்தக் கணக்கில் உள்ள மானியத்தைப் பணமாக எடுப்பதற்குப் பல தடைகள் உருவாக்கப்படும்.

நண்பர்களே, இவற்றைப் படித்தால் அதிர்ச்சியாக உள்ளதா? இந்த அதிர்ச்சிகளை எல்லாம் தெள்ளத் தெளிவாக 25 ஆண்டுகளாகக் கூவிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இவற்றைப் பற்றிப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிவிட்டார்கள். நீங்கள் மிக மோசமாக அவற்றை நிராகரித்தீர்கள்.

என் தந்தை, தாய் இருவரும் முழுநேர அரசியல் பணிகளில் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அமைப்பினர் பலர் தமது வாழ்க்கையையே முழுநேர மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். அந்த வாழ்க்கைக்கெல்லாம் ஏதேனும் மரியாதை இந்தச் சமூகத்தில் உள்ளதா?  இடதுசாரிகளுடன் எனக்கு முரண்பாடுகள்தான் அதிகம் என்றாலும் அவர்களெல்லோரும் இந்த நிலைமைகளைப் பற்றி, தொண்டை கிழியக் கத்திக்கொண்டுதானிருக்கிறார்கள் என்பதால் அவர்களைப் பணிந்து போற்றுகிறேன்.

தேர்தலில் வாக்களிப்பதுதான் அரசியல் என நீங்கள் நினைக்கிறீர்கள். நமக்கான அரசாங்கம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் பக்குவம் இருப்பவர்கள்தான் அந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இப்போதும் இந்தியாவில் நல்ல மாற்றங்களைக்கொண்டு வர முடியும். ஆனால் அதற்கு நீங்கள் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அரசியலைப் பற்றி உங்களிடம் பேச வந்த எங்களை உங்கள் பெற்றோர் விரட்டி அடித்தார்கள். ’அவர்களோடு சேராதே…படிப்பு உண்டு வேலை உண்டு என இருக்கப் பழகு’ என்று அறிவுரை வழங்கினார்கள்.

அரசுப் பள்ளிகளை நிராகரிக்கவும், அரசு மருத்துவமனைகளை இழிவு செய்யவும் உங்கள் பெற்றோர் கற்றுத்தந்தார்கள். வேளாண்மை செய்வதே கேவலம் என அவர்கள்தான் இழித்துரைத்தனர். ’மாடு மேய்ப்பது இழிவு. பால் பாக்கெட்டுக்காகக் காத்திருப்பது கவுரவம்’ என்று உங்கள் பெற்றோர் பாடம் நடத்தினார்கள்.

ஒரு சமூகம் தற்சார்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உங்களிடமிருந்து மறைத்தது உங்கள் மூத்த தலைமுறை. அவர்கள்தான் ‘மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முடியாது’ என்ற தண்டனையையும் அனுபவிக்கிறார்கள். அதே தண்டனைச் சிறைக்குள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கூட அவர்கள் அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனியாவது உண்மையான அரசியலைப் படியுங்கள்.  அந்த அரசியலை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். கல்லூரிக் காலங்களில் ’என் பிள்ளையை நீதான் கெடுத்துவிட்டாய்’ என பல பெற்றோர் என்னிடம் கூறியதுண்டு. இப்போதும் பலர் என்னை அவ்வாறு நிராகரிப்பதையும் நான் பார்க்கிறேன். உங்களை எல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒழுங்காகக் கெடுத்திருந்தால், இப்போது நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்போம். புத்திசாலிகளின் மொழியில் சொல்வதானால், சீக்கிரம் கெட்டுப்போங்கள் நண்பர்களே, சக மனிதர்களையும் நன்றாகக் கெடுங்கள்

1 comment:

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.