Friday, 5 August 2016

பணம் செல்வம் இல்லை

“ஆடிட்டர் சார் உங்கள பாக்க வரணும். ஒரு மணி நேரம் உங்க டயம் எனக்கு வேணும்.”

இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்த முக்கிய நிகழ்வு இந்த வார்த்தைகளோடுதான் தொடங்கியது.

அந்த நபரை ரோட்டரி சங்கம் மூலமாகத்தான் தெரியும். அவர் என்னுடைய வாடிக்கையாளர் இல்லை. பிறகு ஏன் வேலைநாளில் ஒரு மணி நேரத்தைக் கேட்கிறார்?

“உங்க நேரத்துக்கு என்ன காசு உண்டோ சொல்லிருங்க. அதைக் கொடுத்துடறேன். ஆனா நான் சொல்ல வந்த விஷயத்தக் கேட்டா நீங்க காசே வேண்டாம்னு சொல்லிருவீங்க. உங்களுக்கு சுக்ர தசை ஆரம்பிச்சாச்சு. ஏன்னா எனக்கும் இப்போ சுக்ர தசை.”

எனக்கே உரித்தான ஒரு ஆர்வக் கோளாறு காரணமாகத்தான் அவருக்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தேன்.

குறித்த நேரத்திற்கு வந்துவிட்டார். சுற்றிவளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“எனக்கு நைஜீரியாவிலருந்து நூத்து நாப்பது கோடி பணம் வரப்போவுது. நீங்கதான் இந்த விஷயத்துல என்னுடைய ஆடிட்டரா இருந்து எல்லாத்தையும் கவனிச்சிக்கணும். உங்களுக்கு எத்தனை கோடி பீஸ் வேணும்?”

இன்று யாராவது அப்படிப் பேசினால் வாய்விட்டுச் சிரிப்போம். நைஜீரியாவில் நடக்கும் பண மோசடி அந்த அளவிற்குப் பிரபலமாகிவிட்டது. ஆனால் அன்று அது அவ்வளவாகத் தெரியாது. அது போக அப்போது இண்டர்நெட், வந்திருக்கவில்லை.

ஒரு மணி நேரம் அந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்வது போன்ற விவரங்களை உற்சாகமாகச் சொன்னார். வருமானவரியைக் கட்டிவிடுவோம் என்றும் சொன்னார். நான் அவருடன் சிங்கப்பூரோ லண்டனோ செல்ல வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.

“பாஸ்போர்ர்ட்ட தேடிப் பிடிச்சி தூசி தட்டி வையுங்க.” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தார்.

“என் ஃபீஸ்.. “

“நூத்திநாப்பது கோடி வரப்போவுதுல்ல.. “

“அது வந்தப்பறம் அதுக்குப் பாத்துக்கலாம். இப்ப இந்த ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்க.”

“சொல்றேன்னு தப்பா நெனக்காதீங்க. நீங்க படு அல்ப்பம் சார். இந்தாங்க.”

அவர் சென்றபின் சென்னையில் இருக்கும் என் தொழில் முறை நண்பர்களுடனும் ஆப்பிரிக்க நாடுகளுடன் தொடர்புடைய என் வாடிக்கையாளர்களிடமும் பேசினேன்.

இது நைஜீரியாவில் நடக்கும் அக்மார்க் டுபாக்கூர் வேலை என்று அவர்கள் ஒருமனதாகச் சொன்னார்கள். இதில் ஏமாந்து சொந்தப் பணத்தை இழந்த்வர்களின் கதைகளை ஃபேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்கள்.

அந்த நண்பரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ஃபேக்ஸில் வந்ததை அவருடைய அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தேன்.

“எனக்குப் பணம் வரது உங்களுக்குப் பொறுக்கல சார். நான் வேற ஆடிட்டரப் பாத்துக்கறேன்.” என்று எரிச்சலுடன் சொன்னார் அந்த மகானுபாவர்.

ஒரு வாரம் கழித்து என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்திருந்தார் அவர்.

“இதக் காமிச்சிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.”
அதிர்ந்து போனேன். அவர் பெயரில் நூத்திநாற்பது கோடி ரூபாய்க்குக் காசோலை.

“எத்தனை பூஜ்யங்கள் இருக்குன்னு எண்ணிப் பாத்துக்கங்க ஆடிட்டர் சார்.”

“இந்த செக் பணம் இல்லை. இந்தப் பணம் நிஜம் இல்லை சார். இது ஒரு மாயத் தோற்றம் சார்.” நான் சொன்னது எதுவும் அவர் காதில் விழவில்லை.

காசோலையை வங்கியில் போட்டார். சுவரில் அடித்த பந்து போல் திரும்பி வந்தது. நைஜீரியாக்காரர்கள் அவரை ஐந்து லட்ச ரூபாயுடன் சிங்கப்பூர் வரச்சொன்னார்கள். போனார். ஐந்து லட்சத்தையும் மன நிம்மதியையும்  தொலைத்துவிட்டு உயிரும் உடலும் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்ற மனநிலையுடன் அவர் திரும்பி வந்தார்.

சரி அதைவிடுங்கள். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இன்று பலரும் பணமும் செல்வமும் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது என்னிடம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் இருந்தால் அதே அளவிற்கு எனக்குச் செல்வம் இருக்கிறது என்று கணக்குப் போடுகிறார்கள்.. அது தவறு.
அவர் காட்டிய 140 கோடி ரூபாய் காசோலை போன்றதுதான் என் கையில் இருக்கும் பணம். அது ஒரு மாயத் தோற்றம் மட்டுமே.

பணம் செல்வம் இல்லை. (money is not wealth) அந்தப் பணத்தை நம் மனம் போல் செலவழிகக் முடியுமென்றால் அப்படிச் செலவழிக்கும்போதுதான் அது செல்வம் ஆகிறது. அதுவரை? செல்வமாகும் தன்மை மட்டுமே பணத்திற்கு இருக்கிறது. . ஆனால் பணம் செல்வம் இல்லை.

எனக்குத் தெரிந்து ஒரு உள்ளாட்சி அதிகாரி எக்குத்தப்பாக லஞ்சம் வாங்கி பணம் சேர்த்திருந்தார். அந்தப் பணத்தை எல்லாம் அவருடைய நெருங்கிய நண்பர்களான ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்து வைத்திருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். “திரும்பி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்வேன். அது வரை என் பணம் உங்களிடம் இருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். பாவம் அவர் திரும்பவேயில்லை.

போன ஊரில் ஒரு நாள் காலை நடைப்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு வந்து இறந்து போனார். ஒப்பந்தக்காரர்கள் அவருக்குக் கொடுத்த வாக்கை மீறவில்லை. அந்தப் பணத்தைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. இன்றளவும் சொல்லவில்லை.

அந்தப் பணம் அவருக்குச் செல்வமா? சத்தியமாக இல்லை. அது செல்வமாக மாறியிருக்கலாம்.  ஆனால் மாறவில்லை.

ஒரு மருத்துவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். ஆனால் வருமானவரித்துறையினருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக ஒரு பழைய ஸ்கூட்டரில்தான் செல்வார். அவர்கள் எப்ப்டியோ மோப்பம் பிடித்து அவருடைய கிளினிக்கில் சோதனை செய்த போது அவர் மேஜை டிராயரிலிருந்து ஏறக்குறைய மூன்று கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்தார்கள்.

நோயாளிகளிடம் வாங்கும் பணத்தை ஒரு கவரில் போட்டு அதன் மேல் நோயாளியின் பெயரையும் வாங்கிய தேதியையும் எழுதிவைக்கும் பழக்கம் அந்த மருத்துவருக்கு இருந்தது.

வருமானவரி சோதனைக்குச் சென்ற அதிகாரி என்னிடம் அங்கலாய்த்தார்.

“சில கவர்ல அஞ்சு வருஷத்துக்கு முந்தின தேதி இருக்கு. மூணு கோடிய ரொக்கமா வச்சிக்கிட்டு அந்தாளு இன்னும் வாடகை வீட்டுல இருக்காரு. இத்துப்போன ஸ்கூட்டர்தான் வச்சிருக்காரு.”

எனக்குப் புரிந்துவிட்டது. அந்த மருத்துவரிடம் பணம் இருந்தது. ஆனால் செல்வம் இல்லை. அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தைச் செல்வமாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் மாற்றவில்லை.

பணம் ஒரு மாயத்தோற்றம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் நான் இந்தோனேஷியா சென்றிருதேன். அவர்கள் பணம் ருப்யா. நமது ஒரு ரூபாயைக் கொடுத்தால் 169 ருப்யா கொடுப்பார்கள் (அப்போது). ஆகா என்று முதலில் வாயைப் பிளந்தேன்.

அப்புறம்தான் தெரிந்தது வில்லங்கம்.

அங்கு விமான நிலையத்தில் வரிக்கட்டணம் 40000 ருப்யா. ஒரு நாள் இரவு டாக்சியில் ஐந்து கிலோமீட்டர் தூரம் செல்ல 2 லட்சம் ருப்யா கொடுக்கவேண்டியிருந்தது.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் காவல்காரர் “மாதம் எட்டு லட்சம் ருப்யா சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருக்கிறது.”  என்று அரைகுறை ஆங்கிலத்தில் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

நம் கையில் 59172 இந்திய ரூபாய் இருந்தால் போதும். இந்தோனேஷியாவில் நாம் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.. ஆமாம் அதற்கு ஒரு கோடி ருப்யா நமக்குக் கிடைக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? நம் ஊரில் 59172 ரூபாய்க்குக் கிடைக்கும் விஷயங்களில் பாதிகூட அங்கே கிடைக்காது. அது பணவீக்கத்தின் அசிங்கமான அடையாளம்.

பணம் தான் வீங்கும். செல்வம் வீங்காது.

என் தந்தை இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு அவரைக் காரில் வைத்து ஊர் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தேன். என் தந்தைக்குச் சர்க்கரை நோய் இருந்தது. சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. உப்பும் சர்க்கரையும் கூடவே கூடாது என்று டாக்டர் கடுமையாக எச்சரித்திருந்தார்.

கார் மாட்டுத்தாவணி பக்கம் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு பெரிய உணவகத்தைப் பார்த்து என் தந்தை ஏக்கத்துடன் சொன்னார்.

“இந்த ஹோட்டலுக்கு எவ்வளவு தரம் வந்திருக்கோம்? டேய் உனக்குப் புண்ணியமாப் போகட்டும். ஒருநாள் என்னை ஹோட்டலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயேண்டா. இப்பக்கூடப் போகலாமா? எனக்கும் பசிக்க ஆரம்பிச்சிருச்சி.”

என் மனதைக் கல்லாக்கிக்கொண்டு சொன்னேன்.

“அப்பா டாக்டர் உப்பு கூடவே கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கார். என்னுடைய கிளையண்ட் ஹோட்டல் ஒண்ணு இருக்கு. ஒரு நாள் உங்களுக்காக உப்பு இல்லாம ஸ்பெஷலாப் பண்ணித்தரச் சொல்றேன். அங்க போய் வயிறு நிறைய சாப்பிடலாம்ப்பா.”

“போடா. அவ்வளவுதூரம் போய் சப்புன்னு சாப்பிடறதவிட உங்கம்மா பண்ற உப்பு சப்பில்லாத சாம்பாரே தேவலை. நீ வீட்டுக்கு வண்டிய விடு.”

இது நடந்தது ஞாயிற்றுக்கிழமை. அடுத்த புதன்கிழமை அப்பா இறந்துவிட்டார். அது முன்பே தெரிந்திருந்தால் அன்றே அவருக்கு அந்த ஹோட்டலில் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருப்பேன்.

இதில் வேடிக்கையைப் பாருங்கள். நானும் என் உடன் பிறந்தவர்களும் நல்ல நிலையில் இருக்கிறோம். நாங்கள் மனதுவைத்தால் அப்பாவுக்காக ஒரு ஹோட்டலையே வாங்கும் அளவிற்கு எங்களுக்கு வசதி இருக்கிறது. ஆனால் அன்று எங்கள் தந்தைக்கு வாய்க்கு ருசியாக உணவு வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

எங்களிடம் ஒரு ஹோட்டலையே வாங்கும் அளவிற்குப் பணம் இருந்தது. ஆனால் எங்கள் வயதான தந்தை கடைசியாக ஆசைப்பட்ட உணவை வாங்கித்தரும் அளவிற்குச் செல்வம் இல்லை.

பணம் செல்வமாக மாறப் பல தடைகள் வரலாம். என் தந்தைக்கு வந்தது போல் உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம். கையில் பணம் இருக்கும். ஆனால் அதைச் செலவழிக்கக் கூட நேரமில்லாமல் சம்பாதித்துக் கொண்டிருப்போம். இன்று பலரின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

பணம் சம்பாதிக்க வேண்டியது முக்கியம். ஆனால் அந்தப் பணத்தைச் செல்வமாக  மாற்றி அது  நமக்கு இன்பம் தரும் வகையில்  வாழவேண்டியது அதைவிட முக்கியம்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.