Monday, 4 July 2016

ஓட்டைகளும் கேள்விகளும்....


ராம்குமாரின் வாக்குமூலம் என்ற பெயரில் செய்தித்தாள்களிலும் இணையதளங்களிலும் வெளியிடப்படும் கொலைக்காரணங்கள் இரண்டு நோக்கங்கள் கொண்டவை.
ஒன்று இக்கொலையை உணர்ச்சிவயப்பட்ட குற்றம் (crime of passion) என நிறுவுகின்றன. இப்படி முன்வைப்பதன் மூலம் தூக்குத்தண்டனையில் இருந்து ராம்குமார் தப்பிக்க முடியும். இன்னொரு நோக்கம் ஸ்வாதியை புனிதப்படுத்துவது

1)   காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே ஸ்வாதிக்கு ஒரு புனித பிம்பத்தை அளிக்க முயல்கிறது. அதனாலே ராம்குமார் எப்படி ஸ்வாதியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டான், எவ்வளவு காலம் தொடர்பில் இருந்தால் ஆகிய கேள்விகளுக்கு நம்பமுடியாத பதில்களை அளிக்கிறது. ஒரு கோயிலில் அவளை அவன் சந்தித்ததாகவும் பின் தொடர்ந்து சென்று காதலை தெரிவித்ததாகவும் இன்றைய ஹிந்துவில் அறிக்கை உள்ளது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் வந்த முரளி படங்களில் கூட இவ்வளவு எதேச்சையாய் காதல் ஏற்படாது. குறைந்தது அப்பெண்ணுடன் தொடர்ந்து பேசி பழக, அருகாமையில் இருக்க ஒரு சாத்தியம் இருக்க வேண்டும். சில செய்திதளங்களில் இருவருக்கும் பேஸ்புக், வாட்ஸ் ஆப் பழக்கம் பல மாதங்களாய் இருந்து வந்தது என்றும், அதன் நீட்சியாகவே அவன் அவளிடம் காதலை தெரிவித்தான் என்றும் ஒரு குறிப்பு வருகிறது. எப்போது ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டதாய் கோபம் ஏற்பட்டு அது கொலைவெறி ஆக வளரும்? அப்பெண் அவனுக்கு கனவுகளைத் தந்து அதை தகர்த்தால் மட்டுமே. எதேச்சையாய் சாலையில் குறுக்கிடுகிற பெண்ணிடம் நீங்கள் ஒரு தேசலான நட்பை ஏற்படுத்தினால் கூட அது உங்களுக்கு நம்பிக்கைகளை தராது. ஆக ஸ்வாதியுடன் அவனுக்கு இருந்த உறவின் தீவிரம், காலம், ஆழம் ஆகியவை நிரூபிக்கப்பட்டாலே காவல்துறையின் இந்த அறிக்கை நம்பும்படியாக இருக்கும்.
2)    ஸ்வாதியை ரயில் நிலையத்தில் வைத்த அறைந்த நபர் யார்? அவருக்கு அவள் மீதுள்ள கோபத்திற்கான காரணம் என்ன ஆகிய கேள்விகள் இந்த வழக்கில் முக்கியம்.
3)   இணையதளங்களிலும் சமூகவலைதளங்களிலும் பலரும் எழுப்பி வரும் கேள்வியும், தற்போது பா.ஜ.க முன்வைத்துள்ள சந்தேகமும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒரு பெண்ணை கண்டு காதலுற்று ஏமாற்றமடைந்து அவளை பின் தொடர்ந்து கொல்லும் முறையை முழுக்க திட்டமிட்டு ஊரில் சென்று கத்தியை எடுத்து வந்து ராம்குமார் இக்குற்றத்தை நிகழ்த்தினான் என்பது நம்பும்படியாய் இல்லை என்பது. ஸ்வாதியின் பிம்பத்தை காப்பாற்றுவதற்காய் இந்த குற்றத்தில் ஸ்வாதிக்கு பங்கே இல்லை என நிரூபிப்பதற்காய் காவல்துறை இப்படியான ஒரு திரைக்கதையை எழுதுகிறதா?
4)   ஜவுளிக்கடையில் வேலை செய்ய சென்னைக்கு வந்த ராம்குமாருக்கு அவள் பின்னால் சுற்றுவதற்கும் காலையில் அவளை ரயில் நிலையம் வரை பின் தொடர்ந்து பிறகு அவளது அலுவலகத்தில் இருந்து மாலையில் அவள் பின்னால் மீண்டும் பயணித்து வீடு வரை வருவதற்கும் எங்கே அவகாசம்? வேலைக்காக சென்னை வந்து பிழைப்பை தேடும் எவரும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். அவனது மேன்சன் அருகில் உள்ள மெஸ்ஸில் அவன் உணவருந்திய பணத்தை செலுத்தவில்லை என கடைக்காரர் சொல்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவன் உண்மையிலே வேலை செய்தானா எனும் கேள்வி எழுகிறது. ஸ்வாதியை பார்ப்பதற்காகவே சென்னை வந்தான் என்றால் அவன் முன்கூட்டியே ஸ்வாதியை அறிந்தவனாக இருக்க வேண்டும்.
5)   மேன்சனில் ராம்குமாருடன் தங்கி இருந்த அவனது உறவினர்கள்/நண்பர்களான 10 பேர்கள் எங்கே? ராம்குமார் ரயில் நிலையத்தில் இருந்து தப்பித்து சென்ற போது போனில் பேசியதாய் ஒரு சாட்சி சொல்கிறார். அவருக்கு உதவிய அந்த நபர் யார்?
6)   ராம்குமாரின் சி.சி டிவி பிம்பம் பத்திரிகைகளில் வெளியான பின்னரும் அவர் ஏன் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் இருந்தார்? அவர் யாரை எதிர்பார்த்திருந்தார்? யாருடன் தொடர்பில் இருந்தார்? தன் கொலைக்கருவியை தடயம் அழித்து கைவிடவும், ஸ்வாதியின் ஸ்மார்ட்போனை எடுத்து செல்லவும் தெரிந்த ராம்குமாருக்கு தன் அடையாளத்தை பின் தொடரும் போலீஸ் போன் எண் மூலம் தன்னை கண்டடைய முடியும் என யோசிக்கவில்லையா?
7)   ராம்குமார் ஏன் ஸ்வாதியின் போனை எடுத்து வர வேண்டும்? ஸ்வாதியுடன் ராம்குமாருக்கு நெருக்கமான உறவு இல்லையெனில் அவனது போன் எண் அவளது போனில் இருக்காதே? எதேச்சையாய் சாலையில் பார்க்க நேர்க்கிறவரிடம் எந்த பெண்ணும் தன் போன் எண்ணை கொடுக்க போவதில்லை. அப்படி எனில் ஸ்வாதியின் போனில் அவன் சம்மந்தமான எந்த தடயமும் இராதே. அவன் ஏன் அதை எடுத்து வர வேண்டும்?
8)   ராம்குமார் கைது ஆவதற்கு முன்பு ஒரு விசாரணையில் சம்மந்தப்பட்ட ஒரு காவல் துறை அதிகாரி டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் கொலை செய்த விதமும் ஆயுதமும் ஒரு சாமான்யன் இதில் சம்மந்தப்பட்டிருக்கவில்லை; கொலைத்தொழில் பழகிய ஒருவன் செய்த குற்றம் இது என கூறுகிறார். ஆனால் விசாரணையின் துவக்கத்தில் இருந்தே ஆணையர் இதில் வாடகைக்கொலையாளி சம்மந்தப்படவில்லை என கூறி வருகிறார். இந்த முரண் ஏன்?
9)   ஒரு பக்கம் கத்தி புத்தம் புதிது என செய்தி உள்ளது. ராம்குமார் தான் அதை வாழைத்தோப்பில் இருந்து திருடியதாய் கூறுகிறான். நான் வாழைத்தோப்பில் பயன்படுத்தப்படும் கத்திகளை நேரில் பார்த்திருக்கிறேன். அவை புத்தம் புதிதாய் சுலபத்தில் ஆளை வெட்டும் கூர்முனையுடன் இருக்காது.
10) இறுதியாய் குற்றம் நடந்த அன்று பதிவான ராம்குமாரின் சி.சி டிவி படங்கள் இடையே ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? ஒரே நாளில் பதிவான படங்களில் ஒன்றில் ராம்குமார் சற்று பருமனாகவும் இன்னொன்றில் ஒல்லியாகவும் தோன்றுகிறார். ஒன்றில் செருப்பும், இன்னொன்றில் ஷூவும் அணிந்திருக்கிறார். ஒன்றில் நீள் கைசட்டையும் இன்னொன்றில் அரைக்கைசட்டையும் அணிந்திருக்கிறார். காவல்துறை ஏற்கனவே ஒரு ஆளை தேர்ந்து அதற்கு ஏற்பட சி.சி டிவி படங்களை வெளியிட்டதா?
டிவி சேனல்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கு எனது சில ஊடக நண்பர்களிடம் பேசினேன். அவர்களின் தரப்பு இது:
1)   இக்குற்றத்தின் சிறு பகுதி மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் பெரும்பகுதி மறைக்கப்படுகிறது. அப்பெண் மீது மக்களுக்கு பரிதாபமும் ராம்குமார் மீது கடும் ஆத்திரமும் உள்ளது. இந்த உணர்வுநிலையை பயன்படுத்தி ஒரு சாதகமான சித்திரத்தை அளிக்கவே காவல்துறையும் மீடியாவும் முயல்கின்றன.
2)    காவல்நிலையத்தில் முதன்முதலில் ஸ்வாதியின் மரணத்தை அறிய வந்த அவள் அப்பா மனம் கலங்கவோ அழவோ இல்லை. “உங்ககிட்ட ஏற்கனவே பலதடவை சொன்னேனே கேட்டியா? எத்தனைக் காலம் உன்னை நான் பொத்தி பொத்தி பாதுகாக்க முடியும்?” என அரற்றி இருக்கிறார். அப்படி என்றால் குற்றம் நடக்கப் போவதை அவர் ஊகித்திருந்தாரா? தன் பெண்ணுக்கு ஆபத்து நடக்கப் போகிறது என அவன் பயந்திருந்தால் அது யார் காரணம் நிகழக் கூடும் என நினைத்தார்? ராம்குமார் அவளை ஏற்கனவே மிரட்டி இருந்தானா? அப்படி எனில் ஸ்வாதியின் அப்பா ஏன் தன் மகள் மீது பழி சுமத்த வேண்டும்?
3)    குற்றம் நடப்பதற்கு முன்பு ஒரே மாதத்தில் ஸ்வாதிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை பெங்களூரில் உள்ள தன் காதலனிடம் பேசியிருக்கிறார். இக்காதலன் அவரது ஈமச்சடங்கிலும் கலந்து கொண்டார். அப்படி என்றால் ஸ்வாதியை ரயில் நிலையத்தில் இன்னொருவர் ஏன் அறைய வேண்டும்? இதனிடையே ராம்குமார் எங்கு வந்தார்? ஸ்வாதியின் வாழ்வில் இவ்வளவு ஆண்களுக்கான இடம் என்ன? ஏன் இவ்வளவு சிக்கல்?
பேஸ்புக்கில் நண்பர்கள் எழுப்பும் ஒரு முக்கியமான கேள்வி:
ஏன் ராம்குமாரின் குடும்பத்தினருடன் மீடியா உரையாட போலீஸ் அனுமதிக்கவில்லை? ஏன் அவரது கிராமத்துக்குள் ஊடகங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது? காவல்துறை எந்த தகவல் வெளியாவதை விரும்பவில்லை?
http://thiruttusavi.blogspot.in/2016/07/blog-post_4.html?m=1

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.