Saturday, 2 July 2016

அப்பா விமர்சனம்

அப்பா விமர்சனம் – சமுத்திரகனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் “பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை… பெற்றோரின் கையில் தான் இருக்கிறது…”
எனும் மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் தரமான தமிழ் படம் தான் “அப்பா”.
அப்பா விமர்சனம்
தன் மகனின் திறமை அறிந்து அவன் விருப்பத்திற்கேற்ப அவனை வளர்க்க வேண்டுமென்பது அப்பா சமுத்திரகனியின் லட்சியம். நன்றாகவே படிக்கும் தன் மகனை படி, படி என படுத்தி எடுத்து டாக்டராக்கி அமெரிக்கா சிட்டிசன் ஆக்க வேண்டுமென்பது சமுத்திரகனியின் நண்பர் தம்பி ராமைய்யாவின் ஆசை. இவர்கள் இருவருக்கும் நண்பரான நமோ நாராயணனோ, இருக்கும் இடம் தெரியாமல் நமக்கேன் வம்பென தன் மகனை வளர்த்து ஆளக்க ஆசைபடுகிறார். இந்த மூன்று ஆண் மாணவர்களும், கூடவே அவர்களது இரு பள்ளிப் பருவ தோழிகளும்… பிறந்தது முதல் பிளஸ் டூ செல்லும் வரை… தங்கள் அப்பாக்களின் எண்ணங்களால் சந்திக்கும் சாதனைகளையும், சோதனைகளையும், கூடவே சந்தேகங்களையும், ஒற்றை அப்பாவாக நின்று சமுத்திரகனி தீர்த்து வைத்து அவர்களை சாதிக்க வைப்பதுடன், சமூகத்திற்கு கல்வி விஷயத்தில் தன்னால் ஆன மெஸேஜையும் பொட்டில் அறைந்த மாதிரி போட்டு தாக்கி நமக்கோ, நம் நண்பர்களுக்கோ இளம் பிராயத்தில் இப்படி ஒரு அப்பா இல்லையே… என ஏங்க வைப்பதுடன், நாமும் நம் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு அப்பாவாக இல்லையே… என ஆதங்கப்படவும் வைத்திருக்கும் படம், பாடம் தான் அப்பா திரைப்படம் மொத்தமும்.
சரியான தகப்பனாக, தயாளனாக, சமுத்திரகனி சக்கைப்போடு போட்டிருக்கிறார். மனைவியின் இமேஜ் ஈகோ முகத்திரையை அவரை சில காலம் பிரிந்து கிழித்தெரிவதில் தொடங்கி, மகனின் நீச்சல் திறமையை கண்டுபிடித்து அவனை கின்னஸ் சாதனை புரியும் வீரனாக்குவது வரை… எல்லாமும் சமுத்திரகனிக்கு சாதாரணமாக கைகூடுகிறது.
அதே மாதிரி தனியார் பள்ளி வேனில் அடைத்து போகும் மாணவர்களைப் பார்த்து கவர்மென்ட் ஸ்கூல் சைக்கிள் சவாரி மகன், எங்கள் பள்ளிக்கு வேன் கிடையாதாப்பா? எனக் கேட்க, நீ, நாட்டுக் கோழி சுதந்திரமாக சுற்றி வருகிறாய். அவர்கள் எல்லாம் பிராய்லர் கோழிகள் அதான் அடைச்சு வேனில் அழைத்து போகின்றனர் என்று நக்கலடிப்பதிலாகட்டும், பத்து வயது கூட நிரம்பாத மகனை பொது பேருந்தில் தனியாக ஏற்றி விட்டு, அவனை இறங்க சொன்ன இடத்தில் காணாது தவிக்கும் தவிப்பில் ஆகட்டும் சமுத்திரகனி, நடிப்பில் தான் ஒரு சமுத்திரம் என நிரூபித்திருக்கிறார். பலே, பலே!
பெற்ற ஒற்றை மகன் மீது தன் ஆசை, கனவு, லட்சியம் எல்லாவற்றையும் திணித்து, நன்றாக படித்து முதல் மாணவன் என பெயரெடுத்தாலும் போதாது… எப்படி ஒரு மார்க் குறையலாம் என போட்டு அடிக்கும் பொல்லாத தகப்பனாக தம்பி ராமைய்யா, இறுதியில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்த மகனின் நிலையறிந்து, நிலை குலைந்து போகுமிடங்களில் அப்பப்பா.. அவரது நடிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சில இடங்களில் சற்றே ஜாஸ்தியாக தெரிந்தாலும் தம்பி ராமைய்யா செய்வதால் அது சகஜமாக தெரிகிறது சபாஷ்!
நமக்கு எதுக்கு வம்பு, இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துட்டு போயிடணும், நமக்கேன் வம்பு… என சொல்லி சொல்லியே., தன் பிள்ளையை உயரம் குறைவாக வளர்த்திடும் நமோ நாராயணன்.
ஆனால் அப்பனின் பேச்சையும் தாண்டி, தன் நண்பனின் அப்பா சமுத்திரகனியால், “மனிதனை நாய் பாதுகாத்தால் அது கிராமம், நாயை, மனிதன் பாதுகாத்தல் அது நகரம்… என்பது உள்ளிட்ட தன் கவிதைகள் மூலம் சாதனை உயரம் மிகவும் சிறுவனாக படம் முழுக்க நஷாத் தொடுவது சகாப்த்தம். நண்பர்களுக்கு நஷாத் மொக்க ஐடியாக்களும் கச்சிதம்.
இவர் மாதிரியே, சமுத்திரகனியின் மகனாக வரும் காக்கா முட்டை விக்னேஷ், அப்பவுக்கு ஏத்த பிள்ளையாக டீன் ஏஜ் வயது கோளாறை அழகாக பதிவு செய்துள்ள ராகவ், யுவ ல்ட்சுமி, இட்லி கடைபாயின் மகளாக வரும் படிப்பு மீது அதீத அக்கறையுடன் கேபிரில்லா உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவியர் எல்லோரும் கனகச்சிதம்.
சமுத்திரகனியின் பிடிவாத மனைவியாக பிரீத்தி, பந்தா புருஷனின் பந்தா பிடித்தும், பிடிக்காமலும் பந்தா பாதி மகன் மீதான பாசம் பாதி என வாழும் வினோதினி உள்ளிட்ட இரு பெண்கள் கேரக்டர் கூட பக்கா.
இசைஞானி இளையராஜாவின் உயிரில் ஊடுருவும் உணர்வுபூர்வ இசை, எந்த காட்சியை எது மாதிரி லைட்டிங்கில் படம் பிடிக்க வேண்டும் எனத் தெரியாது… எல்லாவற்றையும் பளிச், பளிச் என படம் பிடித்து, தன் பெயருக்கு பலம் சேர்க்காது இப்படத்திற்கும், கதைக்கும் பலம் சேர்க்கும் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு, ஏ.எல்.ரமேஷின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்டவை சமுத்திரகனியின் இயக்கத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
பிறந்த பிள்ளையின் தொப்புள் கொடி மீது பெற்றோர் சமுத்திரகனியும், அவர் மனைவியும் செய்யும் சத்தியம், சகமாணவி மீதான பால் ஈர்ப்பை தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கு புரிய வைக்கும் பாங்கு…, ‛‛எதையெல்லாம் அப்பாட்ட வந்து சொல்ல முடியுமோ அதெல்லாம் செய், சொல்ல முடியாததை செய்யாதே….” என மகனுக்கு தந்தை கூறும் பன்ச் அறிவுரைகள், அம்மா எங்கிட்டாவது பதுங்கி கிடக்கும் பொறந்த வீட்டுல அதிகாரம் பண்றதெல்லாம் புருஷன் வீட்ல கவுரமா வாழற வரைக்கும் தான்…. எனும் பெண்களுக்கான புத்திமதி, விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பாற்றபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது விவசாயம்தான்… , எனும் பன்ச், நம்பர் நடிகையின் அடுத்த காதலர் யார்? எனும் தனக்கே உரிய பிரபல நடிகை பற்றிய சமுத்திரகனியின் குசும்பு வசனம் உள்ளிட்ட எல்லாமும் படத்திற்கு மேலும், மேலும் வலு சேர்க்கின்றன.
இது மாதிரி மனதை உருக்கும் காட்சிகள், நெஞ்சம் நிறைக்கும் வசனங்கள்… இவற்றுடன் இன்றைய காசு பறிக்கும் கல்வி முறை பற்றியும் அதில் பெற்றோர்கள் கண்ணை மூடிக் கொண்டு கவிழ்ந்து கிடக்கும் விதம் பற்றியும், பிள்ளை வளர்ப்பு பற்றியும் பிரமாதமாக பேசியிருக்கிறது அப்பா திரைப்படம். அதே நேரம், முன்பாதி படம் படு யதார்த்தமாகவும், பின்பாதி படத்தில் இயக்குனர் தான், சமூகத்திற்கு சொல்லிட நினைத்த எல்லாவற்றையும் சொல்லி விடும் அவசரகதி தெரிவது மற்றும் க்ளைமாக்ஸை முன்கூட்டியே யூகிக்க முடியும் பலவீனம் உள்ளிட்ட ஒரு சில குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சமுத்திரகனியின் அப்பா – சமூகத்திற்கு அப்பப்பா எவ்வளவு சீர்திருத்த கருத்துக்களை சொல்லியிருக்கிறது!” பாராட்டுக்கள்!
ஆக மொத்தத்தில், “உங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்த புனித ஆத்மாக்களை வளர்க்காதீர்கள், உயர்த்துங்கள்…. எனும் எண்ட் கார்டுக்காகவே அப்பாவை பார்க்கலாம், படிக்கலாமமென கொண்டாடலாமப்பா!”

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.