Tuesday, 3 May 2016

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?''

முன்னேற்றத்தின் மூலமந்திரம்


""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:

""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.

இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.

ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.

""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.

""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.

""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.

""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.

""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்
#வெற்றி நிச்சயம் என்ற
நூலில் திரு. சுகி சிவம்

3 comments:

  1. டி.என்.பி.எஸ்.ஸி யில் மிகப்பெரிய ஊழல் 2014 ம் ஆண்டு நடைபெற்ற(21-12-2014) tnpsc group4 தேர்வின் 2nd list 2 ,20-04-2016 அன்று tnpsc website ல் விடப்பட்டுள்ளது அதில் மிக மிக குறைந்த மதிப்பெண் எடுத்த கீழ்க்கண்ட எண்கள் 2nd list ல் இடம்பெற்றுள்ளன roll number 271022277, 135 mark, 90 question correct , over all rank 343792, communal rank 71601 then roll number 260525037 141 mark, 94 question correct, over all rank 284255, communal rank 58389 then roll number 270139086, 154.5 mark, 103 question correct,overall rank 180056, communal rank 73135, then roll number 030162283, 159 mark, 106 question correct, overall rank 155318, communal rank 69998 2nd list ல் விடப்பட்ட சுமார் 1000 எண்களில் இதுமட்டுமல்ல இன்னும் உள்ளன,இந்த எண்கள் எந்தவொரு special reservation னிலும் கிடையாது general தான் please check tnpsc website and publish immediately

    ReplyDelete
  2. குருகுலம் admin அவர்களே tnpsc website ல் check செய்து இச்செய்தியை உடனே பதிவிடவும்

    ReplyDelete
  3. Kamal.....do anything immediately ....

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.