Tuesday, 5 April 2016

கீழ்ப்படியாமை ஒரு உயர்ந்த குணம்.

#அடிமைகளை வளர்தெடுப்பதிலே!
நாம் முழு முச்சாக போராடுகிறோம்.

எனது மகன் நேற்று கோவிலில் மறைக்கல்வி வகுப்பு முடித்து வரும்போது ஒரு பரிசோடு வீட்டுக்கு வந்தான். எதற்காக இந்த பரிசு என்று கேட்டபோது வகுப்பில் கீழ்ப்படிந்து (Obedience) நடந்ததற்காக கிடைத்தது என்றான். கீழ்ப்படிந்து நடப்பது என்றால் என்ன என்ற சிந்தனை மனதில் ஓடியது.

எதிரியை அழிக்க அவனை துன்புறுத்த வேண்டும் என்பதே உலக நெறியாக இருந்தது.
தன்னை துன்புறுத்தியும் எதிரியை துன்புறுத்தலாம் என்று ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் தொடர்ந்து காந்தியடிகள் வலியுறுத்தினார். அவருடைய பிடிவாதம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. உலகமே சென்று கொண்டிருந்த பாதையில் செல்லாமல் தனக்கென ஒரு கொள்கை வகுத்து அதில் பிடிவாதமாக இருந்தது ஒரு வகையான கீழ்ப்படியாமை.

கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏற வேண்டும் என்றிருந்தது உலகத்தின் பாதை. அந்த பாதையில் கீழ்படியாமல் நடந்தார். அவரது கீழ்ப்படியாமையை உலகம் ஏற்று தலைவராக கொண்டாடியது.

தனது மகன் சித்தார்த்தர் நாட்டையே ஆளும் அரசனாக வருவான என கனவு கண்டுகொண்டிருந்த பெற்றோரின் கனவுகளை உடைத்து புத்தராக மாறியது ஒரு வகையான கீழ்படியாமை. பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் நடந்த சித்தார்த்தரைத் தான் உலகம் கௌதம புத்தர் என கொண்டாடியது.

ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு மொட்டையடிக்கப்பட்டப் பின் மார்பிலோ அல்லது நெற்றியிலோ பச்சை குத்தப்பட்டு தங்கள் அடிமைகளாகவும், சூதாட்டத்தில் அடமான பொருளாகவும் பயன்படுத்திக் கொண்டிருந்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த சமூக நெறிகளை புறக்கணித்து  கீழ்படியாமல் நடந்தார். அடிமைகளின் மறுவாழ்வுக்காய் போராடினார். அவரது கீழ்ப்படியாமை உலகின் தலை சிறந்த தலைவர்களாக்கியது.

ஹிட்லரின் கீழ்ப்படியாமை பல வரலாறுகளை உருவாக்கியது.

சகமனிதர்கள் பின்பற்றிய சமூக விதிமுறைகளுக்கு கீழ்ப்படியாமல் மாறுபட்டு நின்ற போது தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன.

இப்படி சரித்திர மாற்றத்தை உருவாக்கியவர்களை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் சமூக நடைமுறையை கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறார்கள்.

அதை நாம் புரட்சி என்கிறோம். சமூக புரட்சிகளுக்கு வித்திட்ட அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சமூகத்திற்கு கீழ்ப்படியாமல் நடந்தவர்களே. ஆனால் பின்னர் சமூகம் அவரை பின்பற்ற ஆரம்பித்திருக்கும்.

கீழ்ப்படியாமல் நடப்பது ஒரு எதிர்மறையான செயல் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் வரலாற்றை பார்க்கும்ப் போது புரட்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் அடிப்படை காரணம் கீழ்ப்படியாமையாகத் தான் இருக்கிறது.

ஆனால் நாம் கீழ்ப்படிதலை பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறோம். சொல்வதை எல்லாம் தலையாட்டும் பிள்ளையைத் தான் கீழ்ப்படிதலுள்ள பிள்ளை என்கிறோம். சுற்றியிருக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் தலையாட்டும் பொம்மைகளைத் தான் நம்மால் ஒழுக்கமாக மாணவர்கள் என்கிறோம்.

உடல் அளவில் குழந்தைகள் வளருவதை கவனிக்கும் நாம் உள்ள அளவில் அதன் வளர்சியை கவனிக்க தவறி விடுகிறோம். சுயமாக முடிவெடுக்கும் குழந்தை தான் உள்ள அளவில் வளர்ச்சி அடைகிறது. அப்படி குழந்தை சுயமாக முடிவெடுக்கும் போது சில சமயங்களில் அது பெரியவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. உடனே அடிப்பது, திட்டுவது, பயமுறுத்துவது, பரிசு கொடுப்பது போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி பெரியவர்களின் முடிவுகளை குழந்தைகளுக்குள் திணித்து விடுகிறோம். நாம் திணிக்கும் முடிவுகளை ஏற்றுக் கொண்டால் அவன் நல்லவன். இல்லையெனில் கீழ்ப்படியாதவன்.

வரலாற்றில் வெற்றிபெற்றவர்களின் பிடிவாத குணங்களையும் கீழ்ப்படியாமைகளையும் அவர்களது பலமாகப் பார்க்கும் நாம் அதே குணம் நம் குழந்தைகளிடம் இருக்கும் போது அதை பலவீனமாகப் பார்க்கிறோம்.

கீழ்ப்படியாமை ஒரு உயர்ந்த குணம்.
அதை குழந்தைகள் மனதில் சரியான முறையில் பற்ற வைத்தால் காலம் முழுவதும் பிறருக்கு வழிகாட்டும் விளக்காக மாறுவார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.