Friday, 11 March 2016

காந்தி வீட்டுக் கல்யாணம்

இந்தியக் கலாசாரத்தில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களது கலாசாரங்களுக்கு ஏற்பத் திருமணங்களை நடத்தி வருகின்றனர். தொல்காப்பியத்தில் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே குடும்ப வாழ்க்கையில் பழந்தமிழர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
மங்கலநாண் (தாலி) கட்டப்பட்டதாகப் பழமையான நூல்களில் சான்றுகள் எதுவும் இல்லை. பிற்காலத்திலேயே திருமணத்தின் அடையாளமாகத் தாலிகட்டுவதும், மணமக்கள் இருவருக்கும் கால்விரல்களில் மெட்டி அணிவிப்பதும் வழக்கமாகியுள்ளது.
பெரும்பான்மையோர் விவசாயம் செய்து வந்த நம் நாட்டில் பகல் முழுவதும் விவசாயம் தொடர்பான வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெரும்பாலும் இரவிலேயே திருமணங்களை நடத்தியுள்ளனர். அதனாலேயே இரவில் மட்டுமே தெரியும் அருந்ததி நட்சத்திரத்தை மணமக்களுக்குக் காண்பித்துள்ளனர்.
இன்றும் தமிழகத்தில் கம்பளத்தார் என்ற சமூகத்தினர் தங்கள் சொந்த கிராமத்தில் வெட்ட வெளி மைதானத்தில் வைத்து இரவில் திருமணம் நடத்துகின்றனர். மேலும், இவர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பல திருமணங்களை நடத்துவதும் உண்டு.
இரவில் திருமணம் முடிந்து அனைவரும் உணவு உண்ட பின் பாரம்பரியமிக்க தேவராட்டம் என்ற உன்னதக் கலாசார நடனத்தைச் சிறுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வரை தேவ துந்துபி (உறுமி) என்ற இசைக்கருவியின் பல்வேறு மெட்டுகளுக்கேற்பவும் கலைநயத்துடனும் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஆடுகின்றனர்.
இதில் மணமகனும் பங்கேற்று ஆடுவதும், அதனை மணமகள் தன் தோழிகளுடனும், உறவினர்களுடனும் கண்டு மகிழ்வதும் உண்டு.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மின்சாரமே இல்லாத அதிரவைக்கும் ஒலி பெருக்கிகளின் ஓசையின்றி, மங்கல வாத்தியங்களின் இயல்பான இசை ஒலியில் வீட்டில் வைத்தோ, அருகில் உள்ள கோயில்களில் வைத்தோ எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் சில நாள்களுக்கு முன்பே உறவினர்கள், வெளியூர்களிலிருந்து வருகை தந்து திருமணத்திற்கு உடன் இருந்து உதவியும் வந்தனர்.
அச்சமயத்தில் உறவினர்கள் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்வதும், விவசாயம், விளைபொருள்கள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், தங்கள் வீட்டில் திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் விவரங்களைப் பற்றிப் பேசுவதும், பொருத்தமாக இருப்பின் தங்கள் ஊருக்குப் பெண்ணைப் பார்க்கவோ, பையனைப் பார்க்கவோ வருமாறு அழைப்பு விடுப்பதும் உண்டு.
திருமணம் முடிந்து மொய் எழுதி, தங்கள் வருகையைப் பதிவு செய்யும் வகையில் குறைந்த ஒரு தொகையினை அனைவரும் ஒன்று போல் கொடுத்துப் பெயர் பதிவு செய்துள்ளனர். இது பின்னாளில் வசதிக்கேற்றவாறும், விருப்பத்திற்கேற்றவாறும் மாறிவிட்டது.
மொத்தத்தில் நம் முன்னோர்கள் தங்களின் பழக்க வழக்கங்களிலும், உணவு மற்றும் உடை விஷயத்திலும், திருமண வைபவங்கள் மற்றும் இதர குடும்ப நிகழ்ச்சிகளிலும், பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் எதார்த்தமான, எளிமையான நடைமுறைகளையே பின்பற்றி வந்தனர்.
இருபெரும் தலைவர்களாகிய மகாத்மா காந்தி மகனுக்கும் இராஜகோபாலாச்சாரியார் மகளுக்கும் நடைபெற்ற திருமணம் மிக எளிமையான முறையில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் இருக்க, மகாத்மா காந்தி தன் கைப்
பட நூற்ற நூல் சிட்டத்தை மணமக்களிடம் கொடுத்து ஒருவருக்கொருவர் அதனைக் கழுத்தில் அணிவித்துப் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகே இரு பெருந்தலைவர்களின் வீட்டுத் திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிந்து நாட்டு மக்கள் வியந்தனர்.
சமீப காலங்களில் ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் மற்றவர்கள் வியக்கும் வகையில் விமரிசையாகத் திருமணத்தை நடத்திடவே விரும்புகின்றனர்.
திருமண அழைப்பிதழ் தொடங்கித் திருமண மண்டபம், விலை உயர்ந்த புத்தாடைகள், உணவு ஏற்பாடுகள், பாட்டுக் கச்சேரிகள், பல்லாயிரம் ரூபாய்க்குப் பட்டாசுப் பண்டல்கள், நண்பர்களைத் திருப்திப்படுத்த மதுவகைகள் எனத் தேவையற்ற செவினங்களுக்குப் பெரும் பொருள் செலவு செய்து பின்னர் பொருளாதார நெருக்கடியில் வருந்துகின்றனர்.
திருமண விருந்தில் வகைவகையான உணவுப் பதார்த்தங்களைத் தயார் செய்து அவசர அவசரமாகப் பரிமாறிவிட்டுச் செல்வதும், ஒன்றைச் சாப்பிடுவதற்குள் மற்றொன்று என இலைகளில் கேட்காமலேயே வைத்துவிட்டுச் செல்வதும், அடுத்த பந்திக்குக் காத்திருப்போர் அருகாமையில் வந்து நிற்பதும், சாப்பிடுபவர்களுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை உண்டுபண்ணி, அவர்கள் சரிவரச் சாப்பிடாமல் இலையை மூடிவிட்டு எழுந்து சென்று விடுகின்றனர்.
இதனால் உணவுப்பொருள்கள் வீணாவதோடு, நன்றாக நிதானமாகச் சாப்பிட்ட திருப்தியும் இன்றித் திருமண வீட்டை விட்டுச்செல்ல நேரிடுகிறது. எந்த வகையிலும் தேவைக்கு மிகுதியாக உணவுப் பொருள்களை இலைகளில் பரிமாறி வீணாக்கப்படுவதைத் தவிர்த்தாக வேண்டும்.
திருமண நிகழ்வில் ஆடம்பரச் செலவுகளை அறவே தவிர்த்தும், எந்த நிலையிலும் மது அரக்கனைத் திருமண நிகழ்வில் தலைகாட்டவிடாமல் தடுத்தும், உன்னதமான, உயர்வான கலாசாரத்தை வெளிபடுத்தும் விதமாகத் திருமண நிகழ்ச்சிகள் அமைத்திடல் வேண்டும்.
மேலும், வசதி படைத்தவர்கள் எளிமையான முறையில் தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.