Saturday, 27 February 2016

இப்போது தான் கதையின் கிளைமாக்ஸ்.

உங்களுக்கு எல்லாம் ஒரு உண்மைக்கதை சுருக்கமாக  சொல்கிறேன். கேளுங்கள்.


ஒரு ஊரில் ஒரு வயதான அரசர் இருந்தார். அவருக்கு பல மனைவிகள். அவர்கள் மூலம் அவருக்கு நான்கு மகன்கள். அதில் இரண்டு மகன்களுக்கு மட்டும் ஆகவே ஆகாது!

இந்த அரசர் என்ன செய்தார்? தனக்கு மிகவும் பிடித்த ஒரு மகனை தன் கூடவே வைத்து கொண்டார். இன்னொரு மகனை நாட்டின் தெற்கு பக்கம் அனுப்பி அங்கே உள்ள "வரவு செலவுகளை" கவனிக்க செய்தார்!

தெற்கே சென்ற அந்த மகன், தன் புஜபல பராக்கிரமத்தால் பல அடக்கு முறை செய்து மிகுந்த பொருள் ஈட்டி அதில் நன்றாக வாழ்ந்து வந்தார்!

தலைநகரில் இருந்த மகன், செல்லப் பிள்ளையாக இருந்ததால், மன்னரின் கூடவே இருந்து ராஜ தந்திரம் முழுக்க கற்றுக் கொண்டு அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றி கொண்டே வந்தார்!

மன்னர் கூட இருந்து ஜால்ரா அடித்த கூட்டம், அடுத்த மன்னர் இவர்தான் என்று யூகித்து இவருக்கு ஜால்ரா அடித்து இவர் தலைமை ஏற்க தயார் ஆனது!

இதை தெரிந்து கொண்ட தெற்கே இருந்த இளவரசன், அவ்வப்போது தலை நகர் வந்து, மன்னரிடம் நீதி கேட்டு முறையிடுவார்!

மன்னரும் அவ்வப்போது ஏதாவது புதிய பொறுப்பு, மேலும் நிதி சேர்த்து கொள்ள வாய்ப்பு என்று ஏதாவது செய்து கொடுத்து, சமாதானம் செய்து அனுப்புவார்!

ஆனாலும் இரண்டு இளவரசரிடையே பகை உணர்ச்சி மூண்டு கொண்டே வந்த நிலையில், மன்னருக்கு வயது முதிர்ந்து இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்தார்!

தனக்கு அடுத்து பட்டத்திற்கு, தன் கூடவே இருக்கும் மகன் தான் வருவார் என்று அறிவிக்க முடிவு செய்தார்!

இது தெரிந்து, தெற்கு இளவரன் கொதித்து எழுந்தார். தன் தந்தை யுடன் சண்டை போட்டார். சண்டை முற்றியதில்,

"நீ என் மகனே இல்லை! போ வெளியே!"

என்று அந்த இளவரசரை விரட்டி அவரிடம் இருந்த பொறுப்புகளை பறித்து விட்டார்!

இதற்கெல்லாம் காரணமாக இருந்த செல்லமகன், எதுவும் பேசாமல், ஆனால் உள்ளுக்குள் சந்தோஷபட்டு கொண்டு, மேலும் தனக்கு வலு சேர்க்க மக்கள் ஆதரவை திரட்ட தொடங்கினார்!

எந்த லெவலுக்கு போனார் தெரியுமா?

தங்கள் பரம்பரைக்கே பிடிக்காத பெரும்பான்மையாக இருந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுடன் கூட உறவு வைத்து கொள்ள ஆரம்பித்தார்!

அந்த மத அறிஞர்களுடன் கூடி விவாதம் செய்தார்.அவர்களையும் தன் கைக்குள் போட்டு கொண்டால் பிற்பாடு நம்மை ஆதரிப்பார்கள் என்று கணக்கு போட்டார்!

இப்போது தான் கதையின் கிளைமாக்ஸ்.

எந்த மகன் ஒன்றும் ஆக மாட்டான் என்று தெற்கே அனுப்பி வைக்கப் பட்டாரோ, அவர் வீறு கொண்டு எழுந்தார்!

யார் யாருடன் கூட்டு சேர்ந்தாலும் பரவாயில்லை என்று முடிவு எடுத்து , நேரடியாக வீரத்தை காட்ட முடிவெடுத்தார்!

தலைநகர் மீது படையெடுத்து, தந்தையின் செல்ல மகனை கொன்று விட்டார்!

தன் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார்!

அதுவரை, மன்னருக்கும், அவர் செல்ல மகனுக்கும் ஜால்ரா அடித்த கூட்டம், இப்போது இவர் வசம் வந்து ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது!

நாட்டை கைப்பற்றி பல்லாண்டு காலம் மன்னராக இருந்தார்!

அவ்வளவு தான் கதை முடிந்தது!

பின்குறிப்பு

1) இந்த கதையில் வரும் மன்னர்- ஷாஜகான். செல்ல மகன்- தாரா ஷூகோ. தெற்கே அனுப்பப்பட்ட வேண்டாத மகன்- அவுரங்கசீப்.

2) இந்த கதையை நிகழ்காலத்திற்கு பொருத்தி பார்த்து, வேறு யார் பெயரையாவது நீங்கள் கற்பனை செய்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பு அல்ல.😝

6 comments:

  1. இன்று CRC Upper primary training ...உங்க Updates use பண்ணி கலக்கிட்டோம் சார்.

    ReplyDelete
  2. நல்லாருக்குன்னு டீச்சர்ஸ் பாராட்டுனாங்க சார். Thank you sir

    ReplyDelete
  3. நல்லா கதை சொன்னிங்க...........

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.