Tuesday, 29 December 2015

"ரேடியோவ கண்டுபுடிச்சது மார்க்கோனி, ஆனா அத கேக்க வச்சது இசைஞானி"

1976 மே 14, பண்ணைபுரம் ராசய்யா இளையராஜாவாக அன்னக்கிளியில் அறிமுகமாகி
இன்று ஆயிரமாவது படத்தில் தாரை தப்பட்டையைக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமையுடன் பொங்கலன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியானது. கிராமிய மணம் வீசும் வகையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளன.

பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழுப் படத்தையும் எடுத்து இசையமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதைப் பார்த்து கதையின், காட்சியின் தன்மையை  உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். 

இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழுக்கதையையும், காட்சிகள் பற்றியும், அந்தக் காட்சிகளை பாலா எப்படிப் படமாக்குவார் என்பதைப் பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா, சில முக்கிய காட்சிகளைக் கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து படப்பிடிப்புக்கு முன்பே அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்

பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளைப் படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளில். பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்தக் காட்சியைப் படமாக்கும் புதிய முறை இது. தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி, அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜா, முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.

எந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.

இப்படத்திற்காக "பாருருவாய பிறப்பற வேண்டும், பத்திமையும் பெற வேண்டும்..." என்ற திருவாசக  வரிகளுக்கு இசையமைத்துள்ள ராஜா "என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்... அது இந்த கீதம் அல்லவா.." என்ற உருக்கமான  பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின்  ஐநூறாவது படமான அஞ்சலி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமமில்லாமல் பல விருதுகளை வென்று ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட படமாக அமைந்ததற்கு ராஜாவின் இசையும் ஒரு காரணம். அது போலவே தாரை தப்பட்டை படமும் அமையும் வகையில் அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார்.

"ரேடியோவ கண்டுபுடிச்சது மார்க்கோனி, ஆனா அத கேக்க வச்சது இசைஞானி" என தன் பாடல்களால்  எண்பதுகளை ரேடியோவில் ஆண்ட இளையராஜா இன்று ஐ-ட்யுன்சிலும் இளைய தலைமுறைகளை தன் இசையால் ஈர்த்துள்ளார். பல இளம் இசையமைப்பாளர்களின் படங்களுக்கு மத்தியில் வெளிவந்த தாரை தப்பட்டை தொடர்ந்து ஐ-ட்யுன்சில் முன்னிலையில் இருப்பதே இளையராஜாவின் சிறப்பு.

ஐந்து படங்களிலேயே சரக்கை இழந்து வரும் இளம் இசையமைப்பாளர்களுக்கு இடையே தன் ஆயிரமாவது படத்திற்கும் முதல் படம் போல் இசையமைத்திருக்கும் ராஜா, ராஜா தான் ...

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.