Thursday, 31 December 2015

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக செய்வார்களா?

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக செய்வார்களா?
------------------------------------------------
கிருஷ்ணன் பாண்டவர்களையும், சகுனி கௌரவர்களையும் கொண்டு இவ்விருவரும் ஆடிய சதுரங்கமாக போரை மையமாக்கி வியாசர் எழுதிய காவியமாகவே மகாபாரதத்தைப்  புரிந்து கொள்ள முடிகிறது. போருக்கு முன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான அறிமுகமாகவும், அதன்வழி கிளைக்கதைகளும் இருந்தாலும் அனைத்தும் போர் என்ற மையப்புள்ளியில் வரும் போது கிருஷ்ணனும், சகுனியும் சதுரங்கம் விளையாடத் துவங்கி சகுனியின் பக்கம் தோல்வியாக முடிகிறது. நமக்குத் தெரிந்த முடிவுதான் என்றாலும்,  கதையாகப் படித்திருந்தாலும் அதனை காட்சிப்படுத்தி பார்க்கையில் மனதில் அழுத்தமாகவே பதிந்து விட்டது. இது உண்மையா? கற்பனையா? என்ற விவாதத்திற்குள் வர விரும்பவில்லை. இந்த நல்ல முயற்சியும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும்   அடுத்தது சீதையின் பார்வையில் ராமனின் காவியம் என்று ராமாயணம் தொடரை தர வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகிறது. ஏன் ஆன்மிகம் சார்ந்த அவதாரங்களைப் பற்றி அதுவும் வடமொழியில் எழுதப்பட்ட கதைகள் மட்டும்தான் நாடகங்களாக தயாரிக்கப்பட வேண்டுமா? குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட அக்காப்பியங்கள் இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக மாற்றப்படுகின்றன. இந்தியாவின் இலக்கியமாக உலகுக்கு அடையாளம் காட்டப்படுகின்றன.  ஆனால் தமிழ்க்காப்பியங்கள் தமிழ்நாட்டுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றாக சுருக்கப்பட்டுவிட்டது.இன்றைய மெகாசீரியல்களைவிட சிலப்பதிகாரம் எவ்வகையில் குறைந்தது? பொன்னியின் செல்வன் காட்சி ஊடகத்தில் பதியப்படவேண்டியது காலத்தின் தேவை இல்லையா? அதை சினிமாவாக மாற்றுவதைவிட நாடகமாக உருவாக்கினால் விரிவான பதிவாக அமையும். புரியாத டப்பிங் சீரியல்களையும், குடும்பத்தைக் கெடுக்கும் மெகாசீரியல்களையும் ஒதுக்கிவிட்டு தமிழ்க்காப்பியங்களையும், தமிழ் வரலாற்றுப்புதினங்களையும் காட்சிவடிவமாக்க தமிழ் சானல்கள் முன்வரவேண்டும். வெறும் டி. ஆர். பி. ரேட்டிங்கை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை இனியாவது வெகுஜனங்களுக்கு நம்முடைய தமிழ் காப்பியங்கள் சென்றடைவதையும்,  அவை காட்சிஊடகத்தில் பதியப்பட வேண்டிய அவசியத்தையும் "தர்மம் வெல்லும்" என்ற  அதன் உள்ளடக்கத்தைவிடவும் மகாபாரதமும், நாடகத்தின் வெற்றியும் நமக்கு உணர்த்தியிருக்கிற முக்கிய பாடமாயிருக்கிறது.

பார்க்கலாம்! 

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக யார் செய்கிறார்கள் என்று?

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.