Monday, 30 November 2015

மடையர்களை போற்றுவோம்!

ஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற
கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.

வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம்.

மடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான இவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளோ, கல்வெட்டுகளோ வரலாற்றில் எதுவுமில்லாமல் போனதுதான் சோகம். இவர்கள் ‘மடையர்கள்’என்று அழைக்கப்பட்டார்கள்.

மனதை தொட்டுச் சொல்லுங்கள், இனியும் யாரையாவது ‘மடையா’ என்று திட்டுவீர்கள் நீங்கள்?

மடையர்களை போற்றுவோம்!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.