Friday, 6 November 2015

மதுக்கடைக்குப் பூட்டு! அதற்கே எங்கள் ஓட்டு!

மதுவினால் அரசுக்கு லாபமா?
மேலோட்டமாக யோசித்தால் அப்படித்தான் தோன்றும். 
( nanbansriji. blogspot. com)

அரசே மதுபான ஆலை நடத்தி, அரசே  மதுவை தயாரித்து, 
அரசே அதை விற்பனையும்
செய்திருந்தால் அரசுக்கு லாபம் என்பது சரிதான். ஆனால் நடப்பது அப்படியல்லவே. மதுபான ஆலை தனியாரிடம்,  மது கொள்முதலும், விற்பனையும் மட்டும்  அரசைச் சார்ந்தது. அப்படியானால் அரசுக்கு  "லாபம் என்பது ஒரு பாட்டிலின்  விற்பனை விலையில் இருந்து  கொள்முதல் செய்ததைக் (அடக்கவிலை) கழித்தது போக மீதிதான் அரசைச்சேர்கிறது அல்லவா?" இப்போது சொல்லுங்கள் யாருக்கு லாபம்?
வரும் லாபத்தை மட்டும் வைத்து மீண்டும் கொள்முதல் செய்கிறார்கள். அப்படியானால் அரசின் கஜானாவுக்கு செல்வது எவ்வளவு?

உதாரணமாக 20000 கோடி மது விற்பனை ஆகிறது என்று வைத்துக் கொண்டால் கொள்முதல் 15000 கோடி போக அரசுக்கு செல்வது 5000 கோடி மட்டும்தான்.
அதாவது "மதுவினால் அரசுக்கு லாபம் என்பது போன்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் மதுபான ஆலை முதலாளிகளுக்கு அதிகப்படியான பணத்தை கொண்டு செல்லும் வழியே இந்த டாஸ்மாக் "

மனிதனால் முதலில் மது சுவைக்கப்பட்ட காலம் முதல் இதுவரை மதுஇல்லாத காலமென்று நாம் எதையும் குறிப்பிட இயலாது. இருப்பினும் ஏன் மதுவிலக்கு நம் கோரிக்கையாகிறது? உடன்கட்டை ஏறலும், மனித நரபலியும் நிறுத்தப்பட்டது எப்படி அறிவுசார் சமூகத்தில் சாத்தியமோ? அவ்வாறே   மதுஓழிப்பும் கருதப்பட வேண்டும். எனவே  மதுவிலக்கு ஒன்றே நமது இறுதியான உறுதியான கோரிக்கை. 
இருந்தாலும் படிப்படியாக அதை நோக்கி செல்லும் செயல்திட்டமோ, செயல்பாடோ இவ்வரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக தாலுகாவிற்கு 2 எலைட் கடைகள் என்ற அறிவிப்பே கிடைக்கிறது. 

மதுவால் ஏற்படும் கொடுமைகளுக்கு இணையாக மதுவை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களும் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். 'ஜாமீனில் வெளிவர நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' என்று உறுதியுடன் புழல் சிறை கண்ட சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், மனஉறுதியோடு போராடும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, விடாமுயற்சியோடு சட்டப் பஞ்சாயத்து இயக்கம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கோவன், அனைத்திற்கும் மேலாக மது எதிர்ப்புக்காக வாழ்நாள் முழுவதும் போராடி, மது எதிர்ப்பு போராட்டத்திலேயே தன் இன்னுயிரை விட்ட காந்தியவாதி சசிபெருமாள் ஐயா என்று மதுவை எதிர்ப்பவர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது நல்லதா?

வரும் தேர்தலில் மதுவிலக்கு மட்டுமே பிரதான கோரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவைக் கொடுத்து ஓட்டு கேட்ட தேர்தல்  போய் இப்போது மதுவை விடுத்து ஓட்டு கேட்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். மதுவிலக்கு பற்றி தேர்தல் வாக்குறுதி தராத கட்சிகளைப் புறக்கணியுங்கள். அதேசமயம் மதுபான ஆலையை நடத்திக்கொண்டே, மதுபான ஆலை நடத்துபவர்களை தங்கள் கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் வைத்துக் கொண்டே மதுவிலக்கு பற்றி வாக்குறுதி தரும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். மதுவிலக்கு  இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு கோஷத்தை முன்வைத்தே தேர்தலை சந்திக்கும். இப்போது நம்முறை நாம் ஒரு கோஷத்தை முன்மொழிவோம். அதை வழிமொழிந்து உறுதிமொழி தரும் கட்சிக்கே வாக்களிப்போம். இதோ நம் முழக்கம்

"மதுக்கடைக்குப் பூட்டு! 
அதற்கே எங்கள் ஓட்டு! "
                                           நண்பன் ஸ்ரீஜி 
(nanbansriji. blogspot. com) 

1 comment:

 1. this is new blog friends.......

  give your comments to improve this blog

  http://siruthli.blogspot.in/

  http://siruthli.blogspot.in/

  http://siruthli.blogspot.in/

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.