Friday, 25 September 2015

சுதந்திர காற்று

உணவுக்காகச் சிறகை விரித்துச் சுதந்திரமாகப் பறந்து, உழைத்து ஓய்ந்து,
தான் கட்டிய கூண்டுக்குத் திரும்புவதற்குத் தான்  பறவைகள் ஆசைப்படுகின்றன. பறவைகளின் இயல்புதான் மனிதர்களுக்கும். ஆனால், அடிமைத்தளை தான் சிறந்தது அல்லது அடிமைகளாக்கியவர்களின் ஆட்சிதான் சிறந்தது என்று கூறினால், அதை மனிதர்களின் அன்றைய சூழ்நிலை, அவர்களுக்கு இன்றைய ஆட்சியாளர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உணர்ச்சிவயம் சார்ந்ததாகத் தான் கருத வேண்டும்.கிட்டத்தட்ட 200 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விவாத அரங்கு பிரபலமானது. பெரும் தலைவர்கள் பலர் இங்கு பேசியிருக்கிறார்கள். அவர்களது விவாதங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் இங்கு பேசினார். சமூக வலைதளங்களில் அவரது பேச்சு வலம் வருகிறது.‘ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதம். அவர்கள் வெளியேறியபோது, அது 4 சதவீதமாக  வீழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில், காலனி ஆதிக்கம் அவர்களது வளர்ச்சிக்காக நடந்தது. ஆங்கிலேயர் இந்தியாவில் செய்த சுரண்டல்களே அதிகம். ெதாழில் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. 

தொழில்துறையையே அழித்தனர். பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் மிளிர்ந்துவந்த காலம் பறிபோனது. நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாயினர். கச்சாப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவற்றை அவர்களது நாட்டில் உற்பத்தி செய்து, ஆடைகளாக இந்தியர்களின் நுகர்வுக்கே வந்து, இந்தியாவை வர்த்தகச் சந்தையாக மாற்றினார்கள். ஆங்கிலேயே ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கி, அடக்கியாண்டவர்களுக்கே கூலி வழங்கிய நிர்பந்தம். 1940களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது இந்தியர்கள் கொத்துக்கொத்தாகச் செத்துவிழுந்தபோது, உணவுப்பொருட்கள் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. 

மனம் பொறுக்காத ஆங்கிலேய அதிகாரிகள் சிலர், இது நியாயமா என்று சர்ச்சிலுக்குக் கடிதம் எழுதினர். அதற்கு ‘காந்தி இன்னும் சாகவில்லையா’ என்று சர்ச்சில் குறிப்பு எழுதினார். இதுதான் ஆங்கிலேய வரலாறு...’இப்படி பல்வேறு கருத்துகளை அடுக்குகிறார் சசிதரூர். ஆங்கிலேயர்களின் ஆட்சி குறித்து நமது பள்ளிகளில் கற்றுத்தரப்படும் வரலாற்றில் கூட, மென்மையாகத் தான் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் ஏற்பட்ட நன்மைகள்தான் அதிகளவில் கூறப்பட்டிருக்கின்றன என்று கூடச் சொல்லலாம். இதனால், அடிமைத்தளையின் சிரமங்களையும், அதில் இருந்து மீள்வதற்குத் தலைவர்கள் பட்ட பாடுகளையும் இன்றைய இளைய தலைமுறை மறந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. வரலாறு உண்மை பேசட்டும்.
- See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=78534#sthash.4qRgmm5d.dpuf

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.