Sunday, 23 August 2015

Payment bank

நேற்று ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்கு Payment Bank என்ற புது விதமான வங்கி முறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.இதன் பின்புலத்தை அறியும் போது இந்த வங்கி முறை நமது வங்கித் துறைக்கு பெருமளவு மாற்றத்தைக் கொடுக்கலாம் என்பதை அறியலாம்.

இந்தியாவில் வங்கிகளைப் பயன்படுத்தாமல் இருக்கும் நாற்பது சதவீத மக்களை வங்கித் துறைக்குள் நுழைக்கும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய முறையில் செயல்படும் வங்கிகள் ஒரு வங்கி கிளையை எளிதில் செல்ல முடியாத மலைவாழ் புறத்தில் திறக்க வேண்டுமானால் அதிக செலவாகும்.

ஆனால் அந்த செலவிற்கேற்ப டெபாசிட்கள் கிடைக்காது. லோன் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இதனால் நஷ்டத்திலே அந்த கிளை இயங்க வேண்டி வரும்.

இதனால் தான் தொலை தூர ஏரியாகளில் அரசு வங்கிகளே அதிகம் செயல்படுகின்றன. தனியார் வங்கிகள் மிகவும் குறைவே.

எவ்வளவு தூரம் அரசு வங்கிகளை வைத்து விரிவாக்கம் செய்ய முடியும் என்பது இந்தியா போன்ற பரந்த நாட்டில் ஒரு சந்தேகமே.

வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார அளவில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது ரிசர்வ் வங்கி கென்யா போன்ற ஆப்ரிக்கா நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்திய ஒரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வியாபாரங்கள் மூலம் அதிக அளவு நுகர்வோர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மூலமாக வங்கித் துறைக்கு அதிக பயனாளிகளை சேர்ப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதனை கிட்டத்தட்ட பின்புற வாசல் வழியாக வங்கிகளின் பயன்களை மக்களுக்கு எடுத்து செல்வது என்றும் கருதிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் நெட்வொர்க் உள்ளது. அதிக அளவில் பயனாளிகள் உள்ளனர். அதிக அளவில் சேவை மையங்கள் நாடு முழுவதும் வியாபித்துள்ளன.

அந்த சேவையையும், பயனாளிகளையும் வங்கித் துறைக்குள் இணைத்தால் என்ன? என்பது தான் இந்த Payment வங்கியின் முக்கிய ஐடியா.

இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதும் எளிது. புதிதாக கிளைகள் எதுவும் திறக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் பெருமளவு செலவு எதுவும் கிடையாது.

தங்கள் கஸ்டமர் தொடர்பான KYC விவரங்கள் ஏற்கனவே நிறுவனங்களிடம் உள்ளன. அந்த தகவல்கள் மட்டும் போதுமானது என்று சொல்லப்பட்டு உள்ளதால் பெரிய அளவில் காகித வேலைகள் இருக்காது.

இன்டர்நெட் வங்கி சேவை, டெக்னாலஜி போன்றவையே Payment வங்கி சேவைக்கு முக்கிய தேவையாக அமையும்.

இந்த வங்கி சேவை கொடுக்கும் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பிரதான வங்கியுடன் சேர்ந்து செயல்படும்.

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் எஸ்பிஐயுடன் இணைந்து செயல்படும். ஏர்டெல் கோடக் மகிந்திரா வங்கியுடன் இணைந்து செயல்படும். ஆனால் பிரதான வங்கிகளின் பங்கு சதவீதம் 30%க்கு மேல் இருக்க கூடாது.

இந்த Payment வங்கியால் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட் பெறலாம். அதனை தங்கள் சேவைகளுக்கு பணம் கட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த வங்கிகள் கடன் எதுவும் கொடுக்க அனுமதி இல்லை. நமது பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணம் இந்த வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக பார்க்கப்படும். இது தவிர டெபிட் கார்ட், ATM போன்றவையும் திறந்து கொள்ளலாம். இதனால் நிறுவனங்களுக்கு வருவாயை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பு.ரிசர்வ் வங்கியின் CRR, SLR போன்றவை இந்த வங்கிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த பணத்தின் 75% பகுதியை பாதுகாப்பான அரசு பத்திரங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் கூட்டிக் குறைக்கும் போது அந்த பலன் மக்களுக்கு சென்றடைவதில்லை. ஏனென்றால், பாதி பேர் வங்கித் துறையையே பயன்படுத்தவதில்லை.

அதனால் ரிசர்வ் வங்கி பணவீக்கம் இவ்வளவு குறையும் என்று காகிதத்தில் ஒன்றை எழுதலாம். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கும்.

பெரும்பாலான மக்களை இவ்வாறு வங்கி சேவைகளில் இணைப்பதன் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் கணக்கீடு செய்வது எளிதாக அமையும்.

இது நீண்ட கால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.