Tuesday, 25 August 2015

உணர்வுமிகு முதிர்காதல்–அமுர்

ஒரு பெண்ணுக்கோ,ஆணுக்கோ காதல் எந்த வயதில் மிக அவசியமான முக்கியமான ஒன்றாக
இருக்கிறது ? அழகும்,துடிப்பும் நிறைந்த ஆரோக்யமான இளமைப் பருவத்திலா ? இல்லை உடலும் மனமும் நலிவடைந்து சதைகள் எல்லாம் சுருங்கி போய் பேரழகு எல்லாம் காலாவதி ஆகிப்போகும் முதிர்ந்த வயதிலா ? நோயும் ,மரணமும்  பற்றிக்கொள்கிற முதுமைப் பருவத்தின் காதலை ஓவியம் போல சித்தரிக்கிறது அமுர் திரைப்படம்.
மனதை நடுங்கச் செய்கிற இந்தப் படத்தின் கதையைப் பார்ப்போம். எண்பது வயது மதிக்கத்தக்க  தம்பதியினர் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர் .இருவரும்  இசையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.  அவர்களுக்கு  திருமணமான ஒரு மகள் இருக்கிறாள். அவளும் அருகில் இருப்பதில்லை. எப்போதாவது அப்பா, அம்மாவை பார்க்க வருவாள் . வயதான கணவனும் மனைவியும் மிகுந்த காதலுடனும் ,மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த  வயதான தம்பதியினரின் மகிழ்ச்சியை குலைக்கும் விதமாக மனைவிக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாதம் ஏற்படுகிறது .கணவனின் காதலை சோதனை செய்வதாக இந்நிகழ்வு அமைகிறது. வயதான கணவன்  சோதனையில் வெற்றி பெற்றானா ?இல்லை மனைவியை கைவிட்டுவிட்டானா ? என்பதை பார்க்கலாம்
மனைவி மருத்துவரிடம் செல்லப் பயப்படுகிறாள். எப்படியோ சமாளித்து அவளை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறான் வயது முதிர்ந்த காதலன்…சிகிச்சை பலனளிக்க  வில்லை.மனைவியின் வலதுபுற உறுப்புகள் செயலிழந்து விடுகிறது .அவளால் சரியாக பேசமுடிவதில்லை . நடக்க முடிவதில்லை. காதலன் தன் காதலியின் வலது கையாக,வலது காலாக  மாறுகிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள் .
நாட்கள் ஊர்ந்து மெதுவாக நகர்கிறது .காதலியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிறது . முதன் முதலாக     இளமைப் பருவத்தில் காதல் வயப்பட்ட போது இருவருக்கும் இடையே நிகழந்த  மகிழ்ச்சியான தருணங்களையும், இனிமையான நினைவுகளையும்  நினைவிழந்து கிடக்கும் காதலியிடம் சொல்லி  அவளை மீட்டெடுத்து விடலாம் என்று காதலன் நினைக்கிறான் .. வயது முதிர்வும் உடல் உபாதைகளும் காதலியை வலியின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது ,இதை காணும் காதலனால் தாங்க முடிவதில்லை . காதலியை தலையணையை கொண்டு அமுக்கி கொன்றுவிடுகிறான்.
இது கொலையா ? இல்லை காதலின் உச்சமா ?
காதலி இறந்த பின் காதலனின் நினைவுகளும் நிஜங்களும் காதலியை தான் தேடுகிறது .. அவர் கொலை செய்யவில்லை.காதலியின் தீராத வழியிலிருந்தும் ,துயரிலிருந்தும் ,உடல் உபாதையிலிருந்தும் விடுதலை அளித்திருக்கிறார் . இதை மெய்பிக்க காதலன் தனிமையில் இருக்கும் போது ஒரு புறா வீட்டிற்குள் வரும். அதை எப்படியோ பிடித்து விடுவார்.
அதன் மேலே ஒரு துணியை போர்த்தி கைக்குள் அடக்கி பிடிப்பார். அவருக்கு என்ன தோன்றியதோ  தெரியவில்லை புறாவை பறக்க விட்டுவிடுவார்.இந்நிகழ்வை துயரின் பிடியில் இருந்து மனைவியை புறாவை போல பறக்கவிட்டு இருக்கிறார் என்பதை படத்தைப் பார்த்து முடிக்கும் போது  ஒவ்வொருவரும் கண்ணீருடன் உணரும் தருணம் அது.
சம காலத்தில்  கணவன் மனைவிக்கும்  இடையேயான காதல் காணாமல் போய் குடும்ப உறவுகள் சிதறிப் போய்  கிடக்கும் சூழலில் அமுர் மாதிரியான திரைப்படங்கள் குறைந்தப்பட்சம் காதலை நினைவு கூர்ந்து நம்மை மனிதனாக்குகிறது ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற இந்தப் படத்தை இயக்கியவர் மைக்கேல் ஹெனகே.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.