ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது
தெரிந்த செய்தி தான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் பரப்பு எந்த அளவுக்கு பரந்து விரிந்துள்ளது என்று தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும்.

ஆண்ட்ராய்ட் போன்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் நிலையில், அவற்றின் மாதிரிகள் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாக தெரியவந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஓபன் சிக்னல் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆண்ட்ராய்டு போன்களில் 1294 பிராண்ட்களின் கீழ் 24,093 வகையான மாதிரிகள் இருக்கின்றன. புதிய போனை தேர்வு செய்ய முற்பட்டால் தலையை சுற்றும் இல்லையா? இதில் முக்கிய அம்சம் என்ன என்றால் கிட்டத்தட்ட 1000 பிராண்ட்கள் கடந்த 3 ஆண்டுகளில் அறிமுகமானவை.
ஆண்ட்ராய்டு போன்களின் இந்த பரந்து விரிந்த தன்மையை ஓபன் சிக்னல் நிறுவனம் அழகான வரைபடம் மூலமும் விளக்கியுள்ளது. பலவண்ணங்களில் பல வித அளவுகளில் அந்த வரைபடத்தில் கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வண்ணமும் ஒரு ஆண்ட்ராய்டு பிராண்டை குறிக்கிறது. கட்டத்தின் அளவு அந்த பிராண்டின் அளைவை குறிக்கிறது. வரைபடத்தில் வல்லப்பக்கத்தில் கொஞ்சம் பெரிய அளவிலான கட்டங்களில் துவங்கி இடப்பக்கம் நகர நகர அவற்றின் அளவு குறைந்து கொண்டே போய் பொடிப்பொடியாகி விடுகின்றன.
முன்னணி பிராண்ட்கள் என பார்த்தால் சாம்சங் முதலிடத்தில் இருக்கிறது.  ஓபன் சிக்னல் செயலி மூலமே இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. எனவே இந்த செயலி உள்ள போன்களை மட்டுமே இவை குறிக்கின்றன. எனவே இதை முழுமையான சித்திரமாக கொள்ள முடியாது என்றாலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் மாறுபட்ட தன்மையை உணர்த்தக்கூடியதாக கருதலாம்.