Monday, 23 February 2015

பெருகும் வன்முறையிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள் !!!


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஆறாம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன? அவள் பெண் குழந்தை என்பதைத் தவிர அவள் மேல் இருந்த தவறென்ன? வெறும் 1,500 ரூபாய் பெறுமானமுள்ள கால் கொலுசைத் திருடுவதற்காக ஓர் உயிரைப் பறிக்கும் துணிச்சல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி வரும்?
அதுவும் அவர்கள் அந்த சிறு பெண்ணைக் கொன்றுள்ள விதத்தைப் படிக்கப் படிக்க அடிவயிறு கலங்கிப் போகிறது. இப்படிப்பட்ட சம்பவங்களால் வெளியுலகம் மிகுந்த அச்சுறுத்தல் நிரம்பிய இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. எந்தக் காரணத்தைச் சொல்லிக் காலங்காலமாக பெண்களை வீட்டுக்குள் அடைத்தார்களோ, அதே காரணத்தை முன்பைவிட தீவிரமாக நம்மையே சொல்ல வைக்கும் சூழலை ஆண்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வகுப்பறையிலேயே ஆசிரியரை கொல்லும் மாணவர்கள், ஆசிரியரின் கன்னத்தில் அறையும் மாணவர்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து பாதிப் படிப்பில் நின்றுபோகச் செய்யும் ஆசிரியர்கள், தன்னுடன் பணியாற்றும் பெண் தோழிகளுக்குப் பாலியல் நெருக்கடி கொடுத்து நிம்மதியாகப் பணி செய்ய விடாமல் அலைக்கழிப்பது அல்லது வேலையை விட்டே போகச் செய்வது, பயணம் செய்யும் இடங்கள், கடைவீதிகள் என்று சுற்றிச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் நம்மை நிம்மதி இழக்கச் செய்கின்றன. பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களின் மன பயத்தை சொல்லில் வடிக்க முடியாது.நாம் பாதுகாப்பான இடம் என்று 
நினைத்து அனுப்பும் பள்ளிக்கூடங்களும் நிறுவனங்களும் வேலைத் தளங்களும் நம் நம்பகத்தன்மையைக் குலைத்துக் கொண்டிருந்தால் என்னதான் செய்வது?இந்தக் குற்றங்களை செய்பவர்கள் யார்? மனிதக் கூட்டத்துக்குத் தொடர்பில்லாத வேற்று கிரகவாசிகளா? இல்லையே!
நம்மில் ஒருவர்தானே.

ஆறாம் வகுப்பு மாணவியைக் கொன்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவள் பள்ளித் தோழர்கள்தானே? அவர்களும் வாழ்வின் வசந்தத்தில் அடியெடுத்து வைக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுகள்தானே? அந்தப் பெண் மொத்தமாகச் செத்துப் போனாள்... இந்தப் பையன்கள் இனி வாழ்நாள் முழுக்க கொஞ்சம்,கொஞ்சமாக சாகப்போகிறார்கள்.பிள்ளைகளைச் 
சுற்றியுள்ள தொழில்நுட்பங்களும் கூடாநட்பும்தான் பிள்ளை களை இப்படி திசை திருப்புகின்றன என்ற வாதம், நாம் மிகப்பெரிய பாதுகாப்பான சமூக அமைப்பாகச் சொல்லும் குடும்பத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

குடும்பம் என்ற அன்யோன்யமான அமைப்பு இவ்வளவு பலவீனமானதா? அந்தக் குடும்பத்தால் மோசமான விளைவுகளை உண்டாக்கும் ஊடகங்களின் பாதிப்பிலிருந்து தன்னுடைய குழந்தைகளைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த முடியாதா?முன்பெல்லாம், ‘பெற்றோரிடம் இல்லாத,
 ஆதரவற்ற குழந்தைகள், சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்தான் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்... அவர்களுக்குத்தான் போதிய வழிகாட்டுதல் இல்லை’ என்ற பொய்யான காரணத்தை முன்வைத்துக் கொண்டிருந்தோமா?

இன்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகள் நல்ல குடும்பத்தில் உள்ள குழந்தைகள்தான்... அம்மா, அப்பாவின் பராமரிப்பில் உள்ள குழந்தைகள்தான்... அனைத்து வசதிகளோடு வாழும் பிள்ளைகள்தான்... அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை அவர்கள்மேல் மட்டும் போடுவதில் அர்த்தமில்லை.
நம் குடும்பத்துக்குள் நிலவும் உறவுகளின் அன்யோன்யத்தைப் பரிசீலிக்க வேண்டும். நாம் உண்மையாக நம் குழந்தைகளிடம் இருக்கிறோமா, குழந்தைகளை தவறான தொடர்புகளில் இருந்து கவனமாக விலக்கி வைத்திருக்கிறோமா என்பது வீட்டில் உள்ள அம்மா, அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

இன்று தொடர்பு கொள்வதற்கு மிக எளிதான சாதனங்கள் வந்துவிட்டதைப் போலவே, அந்தச் சாதனங்களின் மூலம் தவறிழைப்பதற்கான வழிகளும் அதிகரித்துவிட்டன. தன் வீட்டுப் பெண்
 குழந்தைகளின் பாதுகாப்பை முக்கியமாக கருதுவதைப் போலவே தன் வீட்டு ஆண் குழந்தைகளின் மூலம் இன்னொரு பெண்ணின் பாதுகாப்பு பறிபோய் விடாமல் பார்த்துக் கொள்வதும் இன்றைய குடும்பங்களின் தலையாய கடமையாக இருக்கிறது.அந்தக் காலத்தைப் போல வயதுக்கு 
ஏற்ற பிரச்சனைகள் மட்டும் இன்றைக்கில்லை. அப்போதெல்லாம் கல்லூரி காலத்தில்தான் ஆண் - பெண் காதல் பிரச்னைகள் முளைக்கும்.

இன்று ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பெண் குழந்தைக்குக் கூட பாய் ஃபிரெண்ட் இருக்கிறான். அவனுடன் ஒரு ஊடல் வருகிறது. அந்த ஊடலை தன்னுடைய தோழிகளின்மூலம் தீர்த்துக் கொள்ளும் துணிச்சல் இருக்கிறது.ஒவ்வொரு பள்ளி யிலும் நாளுக்கொரு பிரச்சனைசிறு 
குழந்தைகளின் இந்த முறையற்ற உறவு களால்.ஒவ்வொரு பள்ளியிலும்
 வருடத்துக்கு 10-15 பிள்ளைகளாவது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டை விட்டுப் போய் விடுகிறார்கள்.பத்தாம் வகுப்பின் கடைசி நாள் 
பொதுத்தேர்வை எழுதாமல்கூட பிள்ளைகள் கிளம்பிப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன தீர்வு? எப்படி இதைச் சரி செய்வது? யார் மூலம் இதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும்? எந்தத் தொழில் நுட்பமும் தன்னை பயன்படுத்தி தவறிழைக்கச் சொல்லி யாரையும் அழைப்பதில்லை. மனிதன் தன்னுடைய குற்ற மனநிலைக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்கிறான். நாம் அடிப்படையில் சரி செய்ய வேண்டியது மனதின் வக்கிரத்தைத்தான்.ஒரே இரவில் ஊரில் 
நடக்கும் தவறுகளை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்துவிட முடியாது. நாளொரு விதமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் இந்த நம்பிக்கையை இன்னும் ஆழமாக தகர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

‘ச்சேசே... இதெல்லாம் எங்க குடும்பத்தில் நடக்கவே நடக்காது. என் குழந்தைகளை நான் அப்படி வளர்க்கவே இல்லை’ என்று அதீத நம்பிக்கை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நம் குழந்தைகள் எல்லை மீறுபவர்களாக எல்லா நாளும் இருந்திருக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஒரு நாள், ஒரு நிமிடத்தில் இழைக்கும் தவறு மொத்தமாக வாழ்க்கையை சிதைத்துப் போட்டுவிடக்கூடும்.எனவே, 
குழந்தைகளின் மீதான கூடுதல் கவனமும் பாதுகாப்பும் மிக முக்கியம். குழந்தைகளிடம் நாம் நடந்துகொள்ளும் வெளிப்படையான நட்பான அணுகுமுறையின் மூலமே நாம் அவர்களை நம் மனதின் அருகாமையில் வைத்துக் கொள்ள முடியும்.

பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளின் எல்லாத் தொடர்பும் போக்குவரத்தும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.பெண் குழந்தைகளின் சுதந்திரம் கெடாமல் அதே நேரம் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
வழக்கமாக பெண்களின் மேல்தான் நாம் எப்பொழுதும் கவனம் கொள்வோம். இனி ஆண் குழந்தைகளிடம் கொஞ்சம் கூடுதலாக...

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.