ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தலைமையாசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதன், மூலம் விருப்பப்பட்ட மாவட்டம், பள்ளிகளில் மாற்றி, குடும்பத்துடன் சேர்ந்து வாழ வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஏழு ஆண்டுகளாக கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல், தொடர்ந்து ஒரே பள்ளியில் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் குடும்பங்களை பிரிந்து சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், கணினி அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றும், மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் போன்ற பதவிஉயர்வுகளிலும், தேர்வு சமயங்களில் பறக்கும்படை உறுப்பினர் பொறுப்புகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையால், கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக, பணி வரன்முறை கூட இதுவரை செய்யப்படவில்லை. 2008ல் பணி நியமனம் பெறப்பட்டு, தற்போது வரை கலந்தாய்வு நடத்தவில்லை. திருமணத்துக்கு பிறகும், குடும்பங்களை பிரிந்து தொலைதுார மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறோம்.
தற்போது, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, கணினி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர். இப்பணியிடத்திற்கு, ஆட்கள் தேர்வு செய்வதற்கு முன்பு, கலந்தாய்வு நடத்தப்படவேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் முறையாக கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.