Sunday, 23 November 2014

கே.வி.வி. பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்கு பதில் கட்டாய சமஸ்கிருத பாடம்: மத்திய மந்திரி திடீர் பல்டி

மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின்கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ‘கேந்திர வித்யாலயா’ பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலமும், தாய்மொழியாக இந்தியும், மூன்றாவது (விருப்ப) மொழியாக ஜெர்மனும் இருந்து வருகின்றன.

இப்பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இருக்கும் ஜெர்மன் மொழியை நீக்கிவிட்டு, இனி சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக சேர்ப்பது என மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது.
இந்த புதிய முடிவினால் நாடெங்கிலும் உள்ள சுமார் 500 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வகுப்புக்கிடையிலான சுமார் 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என அவர்களது பெற்றோர் கருதுகின்றனர்.
மேலும், ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், கேந்திர வித்யாலயா பள்ளியின் பாடத்திட்டத்தில் இருந்து ஜெர்மானிய மொழியை நீக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கல்வியை ‘காவிமயம்’ ஆக்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று டெல்லியில் பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இராணி கூறியதாவது:-
எனக்கு ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்துவதன் மூலம் நாங்கள் செய்த மற்ற நல்ல காரியங்களில் இருந்து மக்களின் கவனத்தை சிலர் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பது தொடர்பாக ‘கோயேத்தே பயிற்சியகம்’ மற்றும் ‘மேக்ஸ் முல்லர் பவன்’ ஆகியவற்றுக்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது, எந்த நிலையிலும் மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளோம்.
கே.வி.வி. பள்ளிகளில் பிரெஞ்சு, மாண்டரின் மொழிகளை கற்றுத்தருவது போல் ஜெர்மன் மொழியையும் கற்பிக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தில் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதுபோல் நாட்டில் உள்ள 23 தேசிய மொழிகளில் ஒன்றினை விருப்ப மொழியாக தேர்வு செய்யும் மும்மொழி திட்டத்தின்படிதான், சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வழக்கம்போல் இப்பள்ளிகளில் ஜெர்மன் மொழியும் பயிற்றுவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.