Tuesday, 25 November 2014

உலகில் உயிரோட்டத்தோடு வாழும் மொழி தமிழ்: பிஆர்.கோகுலகிருஷ்ணன்


உலகில் உயிரோட்டத்தோடு வாழும் மொழி தமிழ், என முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர்.கோகுலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் தலைவர் செல்வின்குமார் அறிமுக உரை நிகழ்த்தினார். உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் உள்ளிட்ட 30 பேருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கோகுலகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது அவர் பேசியது:
தமிழ் அறிவு என்பது சாதாரணமானதல்ல. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத்தோடு பிறந்த மொழி தமிழ்மொழி. உலகிற்கு நாகரிகத்தை கற்றுத்தந்தவன் தமிழன். எத்தனை மொழிகள் இருந்தாலும், அந்த மொழிகளுக்கு இலக்கியம் இருந்தாலும், தமிழ் இலக்கியத்துக்கு இணையாக எந்த மொழி இலக்கியமும் கிடையாது.
எத்தனையோ மொழியாளர்கள் தமிழை அழித்துவிட முயற்சி செய்தார்கள். முயற்சி செய்தவர்கள் தமிழ்மொழியை ஒன்றும் செய்யமுடியவில்லை.
அந்தளவுக்கு உலகில் வேரூன்றிவிட்ட மொழி தமிழ். உலகெங்கும் தமிழ் உணர்வு பரந்து விரிந்து கிடக்கிறது. ஆன்மிகமாக இருந்தாலும், எந்தவகை இலக்கியமாக இருந்தாலும் தமிழின் சிறப்பை உலகமே போற்றுகிறது.
தமிழமை இன்னும் உலகில் பரப்ப வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், வீட்டில் பேசும் தமிழ் மொழியை பலர் வெளியே பேச தயங்குகின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.
தமிழர் வாழும் இடமெல்லாம் தமிழ் மொழியில் பேச வேண்டும். தமிழ் உணர்வை வளர்க்க வேண்டும். உலகில் இந்த மொழி பெரியஇனத்தின் மொழி. அதனால் தான் உலகில் இன்றைக்கும் உயிரோட்டத்தோடு வாழும் மொழியாக தமிழ் திகழ்கிறது. தமிழ் மொழி பேசுவதில் அனைவரும் பெருமைப்படுவோம், என்றார்.
உலகத்தமிழ் பல்கலைக்கழக தலைவர் செல்வின்குமார் அறிமுக உரை நிகழ்த்தினார். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், இந்திய சாதனையாளர் கூட்டமைப்பு இயக்குநர் சுமதிபச்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நீதிபதி ச.தமிழ்வாணன் ஏற்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக, மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவிதமிழ்வாணன் வரவேற்றுப் பேசினார். தங்கச்செல்வன் நன்றி கூறினார். அனிதா கபிலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.